பா.ஜ., தலைவர்களுக்கு 'செக்' வைக்கும் சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு
பா.ஜ., தலைவர்களுக்கு 'செக்' வைக்கும் சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு
ADDED : ஜூலை 23, 2024 11:36 PM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே, முதல்வர் நாற்காலிக்கு சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில் போட்டி ஏற்பட்டது. ஒரு வழியாக ராகுலின் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் ஆனார். சோனியா உதவியுடன் சிவகுமார் துணை முதல்வர் ஆனார்.
ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, சிவகுமார் முதல்வராக வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பேச வைக்கப்பட்டனர். பதிலுக்கு, சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக தொடர்வார் என்று அவரது ஆதரவு அமைச்சர்களை சிலர் பேச வைத்தனர்.
வாய்ப்பூட்டு
இதனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என மேலும் வாய்ப்பூட்டு போட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்து, அதன் மூலம் கட்சி மேலிடத்திடம் முதல்வர் பதவி கேட்கலாம் என்று சிவகுமார் கணக்கு போட்டு இருந்தார். ஆனால், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வெற்றி பெற்றது.
இதனால் தர்ம சங்கடம் அடைந்த சிவகுமார், முதல்வர் பதவி விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார். இது சித்தராமையாவுக்கு பிளசாக மாறியது. ஐந்தாண்டுகளும் முதல்வராக தொடரலாம் என்று மகிழ்ச்சியில் இருந்தார்.
முள்ளாக மாறி..
இந்த வேளையில் தான் புதிய பூகம்பம் கிளம்பியது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் நடந்த மூடா முறைகேடு ஆகிய விவகாரங்கள், சித்தராமையாவுக்கு முள்ளாக குத்துகிறது. இந்த இரண்டு முறைகேடுகள் குறித்து பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் மேலிடம் கண்டித்ததால், பா.ஜ., தலைவர்கள் முதல்வருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரிலும், முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சித்தராமையாவை எப்படியாவது முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதனால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
பிட்காயின் முறைகேடு
இந்நிலையில் சித்தராமையாவை சந்தித்து பேசிய அவரது ஆதரவு அமைச்சர்கள் சிலர், உங்களை முதல்வர் பதவியில் இருந்து இறக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். 'பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, சட்டசபையில் நாமும் தெரிவிப்போம்' என கூறியுள்ளனர்.
இதையடுத்து சட்டசபை கூட்ட தொடரின்போது பா.ஜ., ஆட்சியில் நடந்ததாக கூறி 21 முறைகேடுகளை, சித்தராமையா வெளியிட்டார். இதில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, எம்.எல்.ஏ., சுனில் குமார் உள்ளிட்டோர் பெயர்களும் அடங்கியுள்ளன.
மேற்கண்டவர்கள் தான் முதல்வருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். பா.ஜ., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சித்தராமையா கூறி உள்ளார். இதன் மூலம் தனக்கு எதிராக பேசுபவர்கள், இனி கொஞ்சம் அடக்கி வாசிப்பர் என, சித்தராமையா தரப்பு கணக்குப்போடுகிறது. ஏற்கனவே பா.ஜ., ஆட்சியில் நடந்ததாக கூறப்படும், எஸ்.ஐ., தேர்வு முறைகேடு; பிட்காயின் முறைகேடு குறித்து அரசு விசாரணை நடத்தி வருவது நினைவுகூரத்தக்கது.
- நமது நிருபர் -