முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தும் சிவகுமார்: சித்தராமையா நாற்காலியை அசைக்க முடியுமா?
முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தும் சிவகுமார்: சித்தராமையா நாற்காலியை அசைக்க முடியுமா?
ADDED : மே 03, 2024 11:02 PM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம், சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன்பே முதல்வர்அரியணைக்கு சித்தராமையா, சிவகுமார் இடையில் போட்டா, போட்டி ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், இருவரும் டில்லி பறந்தனர். முதல்வர் பதவி கேட்டு, மேலிடத்திற்கு தொல்லை கொடுத்தனர்.
ஒருவழியாக ராகுல் ஆதரவுடன், சித்தராமையா முதல்வர் ஆனார். சோனியா ஆசியுடன் சிவகுமார் துணை முதல்வர் ஆனார். இரண்டரை ஆண்டுகள் கழித்து சிவகுமார் முதல்வர் ஆவார் என்று,அப்போது பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து வரும் 20ம் தேதியுடன், ஓராண்டு முடிகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், முதல்வர் மாற்றம் என்ற கணக்குபடி பார்த்தால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்கலாம்.
கடைசி கட்டம்
ஆனால், சிவகுமாருக்கு இப்போதே முதல்வர் ஆசை துளிர்விட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் ஆகிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டு உள்ளார்.
அதாவது கட்சியின் தலைவர் என்ற முறையில், தீவிர பிரசாரம் செய்து, அதிக இடங்களில் வெற்றி பெற வைத்தேன் என்று, மேலிடத்தை நம்ப வைத்து, முதல்வர் பதவி வாங்கலாம் என்பது அவரது கணக்கு. ஆனால், முதல்வரின் கணக்கு வேறு விதமாக உள்ளது.
காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்குள் ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன். இதனால் நானே முதல்வராக தொடர்கிறேன் என்று, மேலிடத்திடம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று, சித்தராமையா அறிவித்து விட்டார்.
இதனால் என் அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருக்க வாய்ப்பு கொடுங்கள் என்று, மேலிடத்திடம் உருக்கமாக கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால், முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் நடக்கலாம் என்றும், தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைக்க, முதல்வர் சித்தராமையா, உள் ஒப்பந்த அரசியல் நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக தேர்தலை சந்தித்த பா.ஜ., 65 இடங்களில் மட்டுமே வென்றது. 15 முதல் 20 தொகுதிகளில் சமரச அரசியல் நடந்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி வருகிறார். அதாவது சித்தராமையாவும், எடியூரப்பாவும் பேசி வைத்து, அரசியல் செய்வதாக அவர் கூறுகிறார்.
ரெட்டி போட்ட குண்டு
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, கொப்பாலில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின் போது, சித்தராமையா என்னுடன் சமரச அரசியல் செய்தார். காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர, எங்கள் ஆதரவை பெற முயன்றார். இதனால் கங்காவதி, பல்லாரியில் அவர் பிரசாரம் செய்யவில்லை' என்று குண்டை துாக்கி போட்டார்.
முதல்வராக நீடிப்பதற்காக சமரச அரசியல் ஆயுதத்தை, சித்தராமையா மீண்டும் கையில் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை பா.ஜ.,வுடன் சமரச அரசியல் செய்து, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை விட்டு தர சித்தராமையா கண்டிப்பாக மறுப்பார். இதனால் சிவகுமார் முதல்வர் ஆசைக்கு ஆப்பு வைக்கவும் வாய்ப்பு உள்ளது. என்ன நடக்க போகிறது என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- நமது நிருபர் -