மகளிர் உரிமைத்தொகையில் வேகம்; முதியோர் உதவித்தொகை மந்தம்
மகளிர் உரிமைத்தொகையில் வேகம்; முதியோர் உதவித்தொகை மந்தம்
UPDATED : மார் 06, 2025 06:57 AM
ADDED : மார் 06, 2025 01:41 AM

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பயனாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் முதியவர்களின் துயரத்தை போக்கும் வகையில், 1962 முதல் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது மாதம் 20 ரூபாய் வழங்கப்பட்டது. 60 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது, 1,200 ரூபாயாக வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு வாயிலாக பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தும் முன் வரை, மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியவர்களுக்கு உதவித்தொகை வரவானது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலான பின், அதற்கு பணம் வழங்கிய பின்னரே முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்திற்கு பின், மாதக் கடைசி நாட்கள் வரை பயனாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. வங்கி சேவை மையங்களுக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியுள்ளது.
எனவே, மாதந்தோறும் 10ம் தேதிக்குள் வழங்க, முதியோர் உதவித்தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்
-- நமது நிருபர் -.