ADDED : ஆக 16, 2024 04:36 AM

பா.ஜ., தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி; தமிழக செயல் தலைவராக நடிகை குஷ்புவை நியமிப்பது குறித்து, அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ல் நிறைவடைந்து விட்டது. அவர் தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது அல்லது புதிய தலைவர் தேர்வு குறித்து, பா.ஜ., உயர்மட்ட நிர்வாகக் குழு ஆலோசித்து வருகிறது.
புதிய தலைவரை நியமிக்கும் வரை, செயல் தலைவரை நியமிக்க வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில், செயல் தலைவர் பதவிக்கு மகளிருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
தமிழக செயல் தலைவராக, நடிகை குஷ்பு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குஷ்பு, தனக்கு கட்சியில் முக்கிய பதவி தர வேண்டும் என, சில மாதங்களாக டில்லி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார். அதற்காக, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு இறுதியில், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைக்காதபட்சத்தில், சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மை வெற்றியை பெற, பா.ஜ., மேலிடம் வியூகம் அமைத்துள்ளது.
உ.பி., மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உ.பி., அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்காத நிலையில், அவரை செயல் தலைவராக்க முடிவெடுத்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் நடிகை குஷ்புவை செயல் தலைவராக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் சர்வதேச அரசியல் படிப்பு படிக்க, செப்டம்பரில் லண்டன் செல்கிறார். ஆறு மாதங்கள் அங்கு தங்கி இருப்பார். இதை வைத்து, தலைவர் பதவியை கைப்பற்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை, தேசிய மகளிர் அணி செயலர் வானதி, கட்சியின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்று, திட்டவட்டமாக கட்சி மேலிடம் கூறிவிட்டது.
அதேநேரம், அவர் படிப்பை முடித்து திரும்பும் வரை, எந்த கோஷ்டியையும் சாராமல் செயல்படும் வகையில், குஷ்புவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க, டில்லி மேலிடம் ஆலோசித்து உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை சேர்த்தல், உட்கட்சி தேர்தல் பணிகளை, செயல் தலைவர் வாயிலாக மேற்கொள்ளவும் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -