'ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி' : செல்வப்பெருந்தகைக்கு இளங்கோவன் பதிலடி
'ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி' : செல்வப்பெருந்தகைக்கு இளங்கோவன் பதிலடி
UPDATED : மே 18, 2024 02:34 AM
ADDED : மே 18, 2024 12:38 AM

சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 'எவ்வளவு காலம் தான் இன்னொரு கட்சியிடம், எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என, கையேந்தி நிற்பது? ஒரு காலத்தில், நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த, காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' என்றார்.
அவரது பேச்சால், தி.மு.க., மேலிடம் அதிருப்தி அடைந்தது. தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'ராகுல் என்ற மனிதனுக்காக, அவர் குடும்பத்திற்காக, ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்.
மத்தியில் ஆட்சி அமையாவிட்டாலும், தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால், உங்களுக்கே தெரியும் என்னவாகும் என்று' என, பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிராக, 'ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான்' என்று பேசி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், தி.மு.க.,வை குளிர வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது:
என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும்கூட, ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என, சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.
தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது; பேசவும் கூடாது. நல்லவேளை, தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான்.
ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு, நாம் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுபற்றி, செல்வப்பெருந்தகை கூறியதாவது:
காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்கான முயற்சி எடுப்பதற்கு எங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. காமராஜர் கண்ட கனவை ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நல்லாட்சி நடக்கிறது. சட்டசபையில் பலமுறை பாராட்டி பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

