வயிறு எரிகிறது; 2 நாளாக சாப்பிடல: மாஜி அமைச்சர் உதயகுமார் குமுறல்
வயிறு எரிகிறது; 2 நாளாக சாப்பிடல: மாஜி அமைச்சர் உதயகுமார் குமுறல்
UPDATED : ஜூன் 04, 2024 03:49 AM
ADDED : ஜூன் 04, 2024 02:57 AM

ஓட்டு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க, நேற்று தேனி வந்தார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளரைக் காட்டிலும் அ.தி.மு.க., வேட்பாளர் அதிகம் உழைத்திருக்கிறார். தொகுதியின் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று 9 லட்சம் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டிருக்கிறார்.
ஆனால், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளனர். அதில் கருத்து திணிப்பு நடத்தி, எங்கள் தொண்டர்களை சோர்வடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அ.தி.மு.க.,வுக்கு என நிரந்தர ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க.,வினர் ஒரு போதும் மாற்று கட்சியினருக்கு ஓட்டளிக்க மாட்டர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 25 இடங்களை கட்டாயம் அ.தி.மு.க., பெறும். தேனி தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறுவோம்.
ஓட்டளித்து விட்டு வருவோரிடம் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தியதாக சொல்கின்றனர். ரகசியமாக நடத்தப்படும் கருத்துக்கணிப்பு எப்படி ஒழுங்காக இருக்கும்?
15 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில், 3 லட்சம் வாக்காளர்களிடம் கேட்டு, அவர்கள் கருத்தறிந்து கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தால் ஓரளவுக்கேணும் சரியாக இருக்கும்.
ஆனால், ஒரு சிலரிடம் மட்டும் கருத்துக்கேட்டு விட்டு, ஒட்டுமொத்த மக்களின் கருத்து போல சொல்வது அபத்தம். ஒரு தரப்பினர் ஆன்-லைனில் கருத்துக் கணிப்பு நடத்தினோம் என்கின்றனர். தொகுதி வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டாமா?
தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்துவிட்டு வயிறு எரிகிறது. இரண்டு நாட்களாக நான் சாப்பிடவில்லை. கடும் மன உளைச்சலில் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்
-நமது நிருபர்-.