ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 02:06 AM

மதுரை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பொதுக்குழு மற்றும் மாவட்ட மாநாடு, மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் நடந்தது.
மாநாட்டில், 'சென்னை மாகாணமாக இருந்தபோது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்று பிராமணர்கள் 30 சதவீதம் பேர் இருந்தனர்; ஆனால், இன்று 3 சதவீதம் பேர் உள்ளதாக கூறுகின்றனர்.
'சரியான எண்ணிக்கையை அறிய சமத்துவ சமுதாயம் உருவாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அவர்களை பாதுகாக்க, அங்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'விப்ர ரத்னா' விருது வழங்கப்பட்டது.
அவர், 'மகாரதி தொண்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''வாழ்க்கையில் பொய், ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. முறையாக வருமான வரி செலுத்த வேண்டும். அப்போது தான் நிம்மதியாக உறங்க முடியும்,'' என்றார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசுகையில், ''பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வந்தால், அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
''பிராமணர் என்றாலே தமிழுக்கு வேண்டாதவர்கள் என்று சிலர் கூறி வைத்துள்ளனர். இது தவறு. உ.வே.சாமிநாதய்யர் இல்லையெனில், இன்று தமிழே இல்லை.
''பிராமணர்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள். ஆனால், இன்று ஆரியத்தை ஒழிப்போம் என்கின்றனர். ஆரியம் என்றால் உயர்ந்தவன், உத்தமமானவன் என்று தான் பொருள்,'' என்றார்.
ராம.சீனிவாசன்,
பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

