கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவு திட்டம் துவக்கம்!
கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவு திட்டம் துவக்கம்!
UPDATED : மார் 01, 2025 11:46 AM
ADDED : மார் 01, 2025 12:15 AM

சென்னை: கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும், அடுத்த மாதம் துவக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்க உள்ளதாக, தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் எண்ணியபடி, தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலம் என, புகழ் படைத்துள்ளது. இதனை பத்திரிகைகள், ஊடகங்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் துறைகளும் பாராட்டுகின்றன. மத்திய நிதி அமைச்சர், ஜன., 31ல் பார்லிமென்டில் அளித்த பொருளாதார அறிக்கையும் பாராட்டியுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டத்தின் சிறப்புகளை கேட்ட தெலுங்கானா மாநில அதிகாரிகள், சென்னை வந்து திட்ட செயலாக்க முறைகளை பார்வையிட்டு பாராட்டினர். இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தினர்.
நாட்டின் பல மாநிலங்களும், இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்துகின்றன. இந்தியாவை கடந்து, இந்த திட்டம் கனடா அரசால் பாராட்டப்பட்டு, அங்கும் செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனிலும் அடுத்த மாதம் துவக்கப் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டம் மட்டுமல்லாமல், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்ற முனைந்துள்ளன. சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலின் போது, 'பா.ஜ., ஆட்சி அமைத்ததும், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, முதல்வரின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போற்றி புகழ்ந்துள்ளது. இப்படி முதல்வரின் சிந்தையில் பூத்த திட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் எங்கும் மணம் பரப்பி, முதல்வருக்கு புகழ் குவிக்கின்றன. தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும் தொலைநோக்கு திட்டங்களால், வறுமை ஒழிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்று திகழ்வதாக, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லாத எரிசக்தி போன்றவற்றில், தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில், மனித வளங்களை வளர்ப்பதில், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட, தமிழகம் முன்னேற்றம் கண்டு, முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
துணிகள் ஏற்றுமதியிலும் தமிழகம், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளதாக, மத்திய அரசின் நிர்யாத் நிறுவனத்தின், 2022 - 23 ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது. புதுமைப்பெண்கள் திட்டத்தால், கல்லுாரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தால், கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.