துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ஒடிசாவுக்கு சென்ற தமிழகத்தின் வாய்ப்பு
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ஒடிசாவுக்கு சென்ற தமிழகத்தின் வாய்ப்பு
ADDED : ஜூலை 19, 2024 12:44 AM

சென்னை: துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, தமிழக தொழில் துறையில், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018ல் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டு மே 22ல், ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் இறந்தனர்.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்பட்ட வழக்கு, அதே ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது; துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்; இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பேற்று கொள்ளப்போவது யார்?' என, நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர்.
'இத்தனை ஆண்டுகளாக சி.பி.ஐ., விசாரணை நடந்தும், இந்த வழக்கில் பலன் இல்லாமல் உள்ளது. சி.பி.ஐ., விசாரணை சரியில்லை. ஒரு நபர் ஆணையம் அமைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்புலம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.
'இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த காலகட்டத்தில் சில நபர்கள் வழியே, அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல்துறை சார்ந்த அதிகாரிகளின் சொத்துக்கள் மதிப்பு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்களுடைய சொத்து பட்டியலை எடுக்க வேண்டும். அந்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, அதிகார மட்டத்தில் ஏற்பட்ட குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது. நீதிபதிகளோ, ஒரு நபர் ஆணையமோ, துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்து, எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதேநேரம், தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டதால், தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும் இதர பாகங்களின் உற்பத்தியில், தாமிரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் தாமிரம் உற்பத்தி செய்த, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வேறு சில நிறுவனங்களும் தமிழகத்துக்கு வருவதை தவிர்த்து, வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.
உதாரணமாக, தமிழகத்தில் மின்சார பேட்டரிகள் உற்பத்தி மையத்தை நிறுவ திட்டமிட்டிருந்த ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம், ஒடிசா மாநிலத்திற்கு சென்று விட்டது. அங்கு, 40,000 கோடி ரூபாயில், மின்சார பேட்டரி ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் வழியே, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்யப் போகிறது; இது தமிழகத்திற்கு பேரிழப்பு.
ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை மூடலால், சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிர உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு, தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வர தயங்குவதாலும், மாநிலத்தில் வளர்ச்சியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இவ்விவகாரத்தை தமிழக அரசு கூர்ந்து கவனித்து, பாதகங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.