நன்றி தெரிவிக்கும் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முடிவு
நன்றி தெரிவிக்கும் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முடிவு
ADDED : மே 29, 2024 06:08 AM

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை திருச்சியில் நடத்துவது தொடர்பாக, தி.மு.க., மூத்த நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை அறிவலாயத்தில், முதல்வர் தலைமையில், தி.மு.க., மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கையின் போது, விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று, மாவட்டச்செயலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகளை அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க.,வின் வெற்றியை கொண்டாடும் வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டது.
அடுத்த மாதம் 3ம் தேதி கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, கட்சி தலைமை அறிவித்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தமாறு, மாவட்டச்செயலர்களுக்கு அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 1ல் டில்லியில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், அன்று காலை 7:00 மணிக்கு டில்லி செல்கிறார். டில்லி விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய அறிவுத்தப்பட்டு உள்ளது. டில்லியில் உள்ள அறிவாலயத்தில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக நடக்கும் இந்த நிகழ்வுகளுக்குப் பின், கட்சி கட்டமைப்பில் பல மாறுதல்களை ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -