ADDED : மே 27, 2024 03:01 AM

சென்னை: 'வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், ஆட்சேர்ப்பு முகவர், வேலை செய்ய உள்ள நிறுவனம் போன்றவை குறித்து நன்கு விசாரித்து, பணிக்கு செல்ல வேண்டும்' என, அயலக தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துஉள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு களுக்காக, வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது.
சமீபகாலமாக, தகவல் தொழில்நுட்பப் பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளுக்கு, சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றதும், சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி நெருக்கடி தரப்படுகிறது. மறுப்பவர்களை கடுமையாக துன்புறுத்துகின்றனர்.
83 பேர் மீட்பு
இந்த நாடுகளில் இருந்து, கடந்த ஆண்டு மட்டும், 83 தமிழர்களை அயலக தமிழர் நலத்துறை மீட்டுள்ளது.
இளைஞர்களை கவர்ந்து இழுத்துச் செல்லும் முகவர்கள், துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படுகின்றனர். இளைஞர்களுக்கு மிக எளிமையான நேர்காணல், தட்டச்சு தேர்வு நடத்தி தேர்வு செய்கின்றனர்.
அதிக சம்பளம், தங்குமிடம், நாடு திரும்ப விமான சீட்டு, விசா ஏற்பாடு செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பப் பணி என நம்பிச் செல்லும் இளைஞர்களை, சட்ட விரோதமாக, தாய்லாந்து எல்லை வழியே, லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்குள்ள 'கோல்டன் டிரை ஆங்கிள்' என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில், கடுமையான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறை பிடிக்கப்படுகின்றனர்.
தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா, வேலை வாய்ப்பை அனுமதிக்காது.
சுற்றுலா விசா சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
சட்ட நடவடிக்கை
இதுபோன்ற மோசடி வலையில், நம் இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆள் சேர்ப்பு முகவர், வேலை செய்ய உள்ள நிறுவனம் குறித்து நன்கு விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்.
விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து, பயணிப்பதற்கு முன், அந்த நாடுகளில் உள்ள இந்திய துாதரகம் அல்லது இந்தியாவில் உள்ள அந்நாட்டின் துாதரகம் வழியே அறிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் பதிவு பெறாமல், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் மற்றும் முகமைகள் மீது, காவல் துறை வழியே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

