ADDED : ஜூலை 13, 2024 05:38 AM

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி தரும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., மாவட்டச்செயலர்களுக்கு உத்தரவு சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கும் வகையில், அக்கட்சிகள் இணக்கமான நட்பை கடைப்பிடித்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, அ.தி.மு.க., மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி ஆதரவு அளித்தது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதுாறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் 'சாட்டை' துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'சாட்டை' துரைமுருகனை தொடர்ந்து கருணாநிதியை விமர்சித்து சீமான் பாட்டு பாடியதையும், தி.மு.க., மேலிடம் ரசிக்கவில்லை. இதனால், சீமானுக்கு நெருக்கடி தரும் வகையில், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பேச்சாளர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலைகளை, தி.மு.க., - மா.செ.,க்கள் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கருணாநிதி பற்றி அவதுாறாக பேசிய சீமான் மீது, வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்
- நமது நிருபர் -.