ஸ்டாலின், உதயநிதி பெயரை சொல்லி மாட்டு வண்டிக்காரருடன் மல்லுகட்டிய போலீசார்
ஸ்டாலின், உதயநிதி பெயரை சொல்லி மாட்டு வண்டிக்காரருடன் மல்லுகட்டிய போலீசார்
ADDED : ஆக 27, 2024 01:22 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்களுக்காக போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார், மாட்டு வண்டி ஓட்டுபவர்களை கூட விட்டு வைப்பதில்லை.
நேற்று மாட்டு வண்டியை இழுத்துச் சென்ற போலீசாரிடம், 'இதை வச்சுத்தான் பிழைப்பு நடத்துகிறேன்' என, மாட்டு வண்டிக்காரர் கதறி அழுத சம்பவம், பொதுமக்களையும் கண் கலங்க வைத்தது.
மறைமுக வார்த்தை
முதல்வர் ஸ்டாலின் செல்லும் கான்வாய் வாகனத்திற்கு, 'விக்டர் -1' என, போலீசார் பெயரிட்டுள்ளனர். அதேபோல, 'சார்ளி' என்றால், ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து முதல்வர் கிளம்புகிறார்.
'கோல்ப்' என்றால் கோபாலபுரம்; 'கோல்ப் - 1' என்றால், முதல்வரின் தாய் வீடு, 'கோல்ப் - 2' என்றால் முதல்வரின் சகோதரி வீடு, 'ஆடம்ஸ்' என்றால் விமான நிலையம், 'ரெயின்போ' என்றால் கவர்னர் மாளிகை செல்கிறார் என, போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் மறைமுக வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற வார்த்தைகளை கேட்டாலே, சாலை ஓரங்களில் பாதுகாப்புக்காக நிற்கும் போலீசார் அலறி, முதல்வரின் கான்வாய் வாகனம் தங்களை கடக்கும் வரை, மற்ற வாகன ஓட்டிகளை படாதபாடு படுத்தி விடுகின்றனர்.
தற்போது, வாகனங்களை அரை மணி நேரம் வரை காத்திருக்க வைக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
சிறுவன் பலியானான்
அந்த வகையில் தான், சமீபத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சென்ற போது, கான்ஸ்டபிள் மகேந்திரன் செய்த அடாவடியால், ஆட்டோ கவிழ்ந்து, 5 வயது சிறுவன் பலியானார்.
அதேபோல, மற்ற அமைச்சர்கள் எவருக்கும், அவர்கள் செல்லும் இடங்களுக்கு, போலீசார் வாகனங்களில் சென்று பாதுகாப்பு அளிப்பது இல்லை. பி.எஸ்.ஓ., என்ற பாதுகாவலர் மட்டுமே உடன் செல்வார்.
ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு அப்படி அல்ல. அவருக்கு போலீசார், 'எஸ்கார்ட் - 30' என, பெயரிட்டு, ஆறு வாகனங்களில் சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
சனாதன பேச்சால் சர்ச்சை எழுந்ததால், அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். அவரது தாய் துர்காவுக்கு, 'எஸ்கார்ட் - 35' என, பெயரிட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார், பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், நேற்று காலை, 10:30 மணியளவில், சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில், முதல்வர் கான்வாய் வாகனங்கள் செல்வதாக, போலீசார் வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டினர். அந்த வழியாக மாட்டு வண்டி ஒன்று வந்தது.
அவரை நோக்கி பாய்ந்து சென்ற போலீசார், அவரை கீழே இறக்கி, வண்டியை ஓரங்கட்டச்சொல்லி மிரட்டினர்.
அவர் சாலையில் படுத்து, 'சார், இதை வச்சுத்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்' என, போலீசாரின் காலில் விழாத குறையாக கெஞ்சினார்; கதறி அழுதார்.
இழுத்து சென்றனர்
அப்போதும், போலீசார் அவரை விடுவதாக இல்லை. வண்டியை ஓட்டக்கூடாது என்று சொல்லிவிட்டனர். மாட்டு வண்டியை இழுத்துச் சென்றனர்.
பொதுமக்களும் கூடிவிட, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், மாட்டு வண்டியை எப்படியோ மனது வந்து, போலீசார் விடுவித்துள்ளனர். இவ்வளவுக்கும் முதல்வரோ, அமைச்சர் உதயநிதியோ அந்த வழியாக வரவில்லை என்பது தான், இதில் ஹைலெட்.
முதல்வர், அமைச்சர் உதயநிதி என்று காரணம் கூறி, அவர்களுக்கே தெரியாமல் நடக்கும் போலீசாரின் இதுபோன்ற செயல்பாடுகள், மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
வி.வி.ஐ.பி., பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் அடாவடி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.