காய்ந்த குளங்களின் காட்சி... கழிவுநீர் கலப்புக்கு சாட்சி!
காய்ந்த குளங்களின் காட்சி... கழிவுநீர் கலப்புக்கு சாட்சி!
UPDATED : ஏப் 27, 2024 05:08 AM
ADDED : ஏப் 27, 2024 01:53 AM

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையால் 23 குளங்கள் பராமரிக்கப்படுகின்றன; நொய்யல் பாயும் குளங்கள் உட்பட இந்த குளங்களின் மொத்த கொள்ளளவு 365 மில்லியன் கனஅடி; தற்போதைய நிலையில், 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ள இருகூர் மற்றும் சூலுார் குளங்கள் உட்பட, இந்த குளங்கள் அனைத்திலுமாக, 140 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது.
அதேபோல, கோவை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் ஒன்பது நொய்யல் குளங்களின் மொத்தக் கொள்ளளவு, 260 மில்லியன் கனஅடி; மூன்று நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி, இவற்றில் 159 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
சிங்காநல்லுார் குளத்தில் 80 சதவீதமும், பெரியகுளத்தில் 70 சதவீதமும், மற்ற குளங்களில் 40லிருந்து 50 சதவீதம் அளவுக்கு, தண்ணீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு, இந்தக் கோடையிலும் இவ்வளவு தண்ணீர் இருப்பு இருக்கிறதே என்று மகிழத் தோன்றும்.
நொய்யல் பாயும் முதல் குளமான உக்குளம் துவங்கி, நகருக்குள் நொய்யல் நுழைவதற்கு முன்பாக, அமைந்துள்ள குளங்களின் நிலையைப் பார்த்தால் தான், நகர குளங்கள் அனைத்திலும் தேங்கியிருப்பது மழை நீரில்லை; கழிவுநீர் என்பது தெரியவரும்.
உக்குளம், சித்திரைச்சாவடி அணைக்கட்டு, புதுக்குளம் (வேடபட்டி குளம்), கோளராம்பதி குளம், கங்க நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம் வரையிலான அனைத்துக் குளங்களும், அணைக்கட்டுகளும், இப்போது கோடை வெயிலின் முற்றிலுமாக வறண்டு, பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன.
நொய்யல் பாயும் முதல் குளமான உக்குளத்தில், தரை தட்டி கொஞ்சம் தண்ணீர் நிற்கிறது; அடிக்கிற வெயிலுக்கு, ஒரு வாரம் கூட தாங்காது.
புதுக்குளத்தில் ஒரு தொட்டி போல இருக்கும் தண்ணீரில், பறவைகள் தாகம் தீர்க்கின்றன; கோளராம்பதி குளத்துக்குள் உள்ள நாட்டுக்கருவேல மரங்களே, ஒரு இலையுமின்றி மொட்டையாக நிற்கும் அளவுக்கு, அந்த குளமும் காய்ந்து கிடக்கிறது.
கழிவுநீர் கலக்காத அந்தக் குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது; சாக்கடை கலக்கும் மாநகரக் குளங்களில், தண்ணீர் இன்னும் இருக்கிறது.
இந்த குளங்களில் உள்ளஆகாயத் தாமரைகள்தான், அவை ஒவ்வொன்றும் வெறும் சாக்கடை சங்கமம் என்பதற்கான பச்சையான, பகிரங்கமான சாட்சிகள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிகளைக் கொட்டி, இந்தக் குளங்களில் ரெடிமேட் கான்கிரீட் கட்டமைப்புகளை அமைத்து காசு பார்ப்பதற்கு, அரசுக்கும், மக்களுக்கும் 'தண்ணி காட்டும்' வேலையைத்தான், மாநகராட்சி அதிகாரிகள் செய்கிறார்கள். கழிவுநீர் கலப்பதை மட்டும் தடுத்து விட்டால், இந்தக் குளங்களும் வெறும் மைதானம்தான்.
கடந்த ஆண்டில், பெருவெள்ளம் பாய்ந்த போதே, இந்த குளங்களில் இருந்த கழிவுநீரை வெளியேற்றி, மழைநீரைச் சேகரித்திருக்கலாம்.
இப்போது கழிவுநீர் தேங்கியுள்ளதால்,கோவையின் நிலத்தடி நீர் மட்டமும் விஷமாகிக் கொண்டிருக்கிறது.
கோடையின் கொடுமை, நீர்ச்சிக்கனம் இவற்றையும் தாண்டி, நல்ல தண்ணீரை குளங்களில் தேக்குவதற்கான முயற்சிகளை, இப்போதே துவங்குவது அவசியம்!

