UPDATED : மார் 28, 2024 09:35 AM
ADDED : மார் 28, 2024 04:32 AM

சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் சேலம் மாவட்ட தி.மு.க., செயலாளர் சிவலிங்கத்தை சமாதானப்படுத்தும் வகையில், அவரை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் வேலு, அவருக்கு 'தியாக சீலன்' பட்டத்தை வழங்கலாம் என ஐஸ் வைத்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தனக்கு சீட் வழங்க வேண்டும் என, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சிவலிங்கம் கேட்டிருந்தார். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு தனது செல்வாக்கை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் நண்பரான தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசனுக்கு சீட் பெற்று தந்தார்.
இதன் காரணமாக, சிவலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தி.மு.க., தலைமை, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான நேருவை அனுப்பி சிவலிங்கத்தை சமாதானம் செய்தது.
தொடர்ந்து, வேட்பாளர் மலையரசனுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் சிவலிங்கத்தின் வீட்டுக்கு சென்று தேர்தலில் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் அவர் சமாதானம் அடைந்தாலும், அவரது ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை.
அவரது ஆதரவு நிச்சயமாக தேவை என்பதை அறிந்த அமைச்சர் வேலு, வேட்பாளர் அறிமுகக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், பிரசாரம் என அனைத்திலும் சிவலிங்கத்தையே முன்னிலைப்படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன், அமைச்சர் வேலு தலைமையில் கள்ளக்குறிச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய வேலு, கட்சிக்காக சிவலிங்கம் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டார். அவருக்கு 'தியாக சீலன்' என்ற பட்டத்தை வழங்கலாம் எனவும் புகழ்ந்து தள்ளினார்.
தி.மு.க., வேட்பாளர் மலையரசன் மனு தாக்கல் செய்ய சென்றபோது, கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் யாரும் உடன் செல்லாத நிலையில், சிவலிங்கத்தை அனுப்பி வைத்தனர். இருப்பினும், தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என தி.மு.க.,வினரே கேள்வி எழுப்புகின்றனர்.
- நமது நிருபர் -