கருணாநிதி விழாவில் பூசல்; திருச்சி தி.மு.க.,வில் சலசலப்பு
கருணாநிதி விழாவில் பூசல்; திருச்சி தி.மு.க.,வில் சலசலப்பு
UPDATED : ஜூலை 24, 2024 02:56 AM
ADDED : ஜூலை 23, 2024 07:43 PM

திருச்சி:மூத்த அமைச்சர் நேருவின் பெயரோ, படமோ இல்லாமல், அமைச்சர் மகேஷ் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சிகளால், திருச்சி தி.மு.க.,வில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் என்றாலே அமைச்சரும், முதன்மைச் செயலருமான நேருவின் கோட்டை என்று தான் தி.மு.க.,வினர் கூறுவர். தற்போது, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வருகைக்கு பின், இரு கோஷ்டிகள் உருவாகி விட்டன.
இந்நிலையில், அமைச்சர் மகேஷ் மாவட்டச்செயலராக இருக்கும் தெற்கு மாவட்டம் மற்றும் மாநகரம் சார்பில், கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், கருணாநிதி நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 20ம் தேதி நடந்த நிகழ்ச்சிகான அழைப்பிதழில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை நிலைய செயலர் துறைமுகம் காஜா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அடுத்தநாள் நடந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், கவிஞர் வைரமுத்து, காங்., முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், ம.தி.மு.க., பொருளாளர் செந்திலதிபன் பெயர்கள் இருந்தன. ஆனால், லோக்கல் மற்றும் மூத்த அமைச்சரான நேரு பெயர் இடம் பெறவில்லை.
அதேபோல், இந்நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்பட்ட பேனர்களிலும், நேருவின் படமோ, பெயரோ இல்லை. திருச்சியில் நேருவின் படமோ, பெயரோ இல்லாமல், தி.மு.க.,வின் போஸ்டர்கள், பேனர்களை பார்த்த கட்சியினர், 'இதெல்லாம் தலைமைக்கு தெரியுமா' என ஆச்சரியமாக பார்த்தனர்.
இதுகுறித்து, மகேஷ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், 'இரு கோஷ்டிகளாக செயல்படுவதால், கட்சியினர் பெரும்பாலோர் விலகி நிற்கின்றனர். இதை சரியாக பயன்படுத்தி, நேருவுக்கு எதிராக மகேஷ் காய் நகர்த்துகிறார்' என்றனர்.
திட்டமிட்டு புறக்கணித்தாரா அருண் நேரு?
தமிழக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் மகேஷ், நேற்று புதுடில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்
மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்தார்.
தி.மு.க., எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.க., மற்றும்
கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.,க்களும் உடன் சென்றனர்.
இதில்
சில எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், பெரம்பலுார்
எம்.பி.,யும், அமைச்சர் நேருவின் மகனுமான அருண் கலந்து கொள்ளாதது குறித்தே
நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக
இருந்தது.
அமைச்சர் நேரு மற்றும் மகேஷ் ஆகிய இருவருக்கும் இடையே,
திருச்சி தி.மு.க.,வில் உள்ள கோஷ்டி அரசியலை அடுத்தே, மகேஷ் கலந்து கொண்ட
முக்கிமான நிகழ்வை, நேருவின் மகன் அருண் நேரு புறக்கணித்துள்ளார் என்றும்
பேசினர்.