ADDED : ஜூன் 30, 2024 07:58 AM

டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் ஆணை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை' என, இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2022 மார்ச்சுடன் முடிந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரம்: டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து மது வகைகளை வாங்கி, சில்லரை கடைகள் வாயிலாக விற்பனை செய்கிறது.
தமிழகத்தில் உள்ள, 11 மதுபான உற்பத்தியாளர்களிடம் மது வகைகளும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீரும் கொள்முதல் செய்கிறது. ஒவ்வொரு உற்பத்தியாளரும், வெவ்வேறு மது வகையை உற்பத்தி செய்கின்றனர்.
எனவே, டாஸ்மாக் தேவை அடிப்படையில், கொள்முதல் ஆணையை பின்பற்ற வேண்டும். கடந்த 1998ல் இருந்து விரிவான கையிருப்பு முறையை பின்பற்றுவதாக, டாஸ்மாக் பெருமையுடன் கூறுகிறது.
இது, அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமாக விற்பனை ஆணைகளை பிரித்துக் கொடுக்கவில்லை. கடந்த, 2019 - 20ல், 17 சதவீதமும்; 2020 - 21ல், 3 - 14 சதவீதமும்; 2021 - 22ல், 3 - 17 சதவீதம் வரையிலும் வேறுபட்டிருந்தன. பீர் வாங்குவதிலும் இந்த வேறுபாடுகள் காணப்பட்டன. இவ்வாறான வெளிப்படையின்மை இல்லாததால், ஒரு சில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணைகள் குறைந்திருந்தன. டாஸ்மாக் கொள்முதல் மற்றும் சில்லரை விற்பனை கொள்கை மிக பழையது. பாரபட்சம் காட்டாமல் சமச்சீராக கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.