ஓட்டுப்பதிவு முடிந்ததும் மும்முனை மின்சாரம் தடை; விவசாயிகள் முற்றுகை
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மும்முனை மின்சாரம் தடை; விவசாயிகள் முற்றுகை
ADDED : ஏப் 30, 2024 03:06 AM

திருப்பூர் : ஓட்டுப்பதிவுக்குப் பின், விவசாய இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், பயிர்கள் கருகுவதாகக் கூறி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி பகுதி விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டும், போர்ட்டிகோவில் தரையில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
'விவசாய இணைப்புகளுக்கு குறை அழுத்த மின்சாரம் வழங்குவதால், மோட்டார்களை இயக்கி, போர்வெல், கிணறுகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் எடுக்கமுடிவதில்லை. வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பயிர்கள் கருகுகின்றன. இரவு நேரங்களில் சீரான உயர் அழுத்தத்தில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமியை கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைத்து பேசியதை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஈசன் முருகசாமி கூறியதாவது:
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவடைந்த நாள் முதல், விவசாய இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுவந்த மும்முனை மின்சாரத்தை, எவ்வித முன்னறிவிப்புமின்றி, மின்வாரியம் தடை செய்துள்ளது. மும்முனை மின்சாரத்தை சீராக வழங்காததால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் எடுக்க முடியாமல், பயிர்கள் கருகிக்கொண்டிருக்கின்றன.
மின்வாரியத்தில் மனு அளித்தபின், 2 மணி நேரம் மட்டும் மும்முனை மின்சாரம் வழங்குகின்றனர். விவசாய இணைப்புகளுக்கு ஏற்கனவே, 8 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுவந்தது.
'மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு விரைந்து காணப்படும்; இல்லாவிடில், நேரடியாக கள ஆய்வுக்கு வருவேன்' என்று கலெக்டர் உறுதி அளித்துள்ளார். மும்முனை மின்சாரம் வழங்கப்படாவிட்டால், கலெக்டர் அலுவலக வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

