ADDED : ஏப் 14, 2024 05:32 AM

ஊழலை எதிர்த்து துவங்கப்பட்ட, ஆம் ஆத்மி கட்சியின் நிலை, இன்று மிக பரிதாபமாக உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யாமல், திஹார் சிறையில் உள்ளார்.
இவரது சகாக்கள் சிலரும், இதே வழக்கில் கைதாகி சிறையில் காலம் தள்ளி வருகின்றனர். கெஜ்ரிவால் அமைச்சரவையிலிருந்த, தலித் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியிலிருந்து விலகிவிட்டார்; இது, கட்சிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
'பா.ஜ.,வின் பழி வாங்கும் நடவடிக்கை' என, கெஜ்ரிவால் கைதை எதிர்க்கட்சிகள் வர்ணித்தாலும், 'ஏதோ ஊழல் நடந்துள்ளது. அதனால் தான், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கைதாகியுள்ள சிலருக்கு, இதுவரை ஜாமின் வழங்கவில்லை' என்கிற பேச்சு, மக்களிடையே பரவத்துவங்கி விட்டது.
இந்த அரசியல் நிலையை லோக்சபா தேர்தல் நடைபெறும் வேளையில், தனக்கு சாதகமாக பா.ஜ., பயன்படுத்த துவங்கி விட்டது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் எம்.பி., - எம்.எல்.ஏ., என தலா ஒருவர் பா.ஜ.,வில் இணைந்து விட்டனர்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், கெஜ்ரிவால் கைதை பற்றி எதுவும் கூறாமல், அமைதியாக இருக்கின்றனர். இதனால், பலர் கட்சியிலிருந்து விலகுவர் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர் என, கருதப்படுபவர் ராகவ் சட்டா; ராஜ்யசபா எம்.பி.,யான இவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். ஏதாவது ஒரு சிறு விஷயம் நடந்தால் கூட, சமூக வலைதளங்களில் பா.ஜ.,வை காய்ச்சி எடுக்கும் இவர், கெஜ்ரிவால் கைதான பின் எதுவுமே பேசாமல், மவுனமாக இருக்கிறார்.
'மதுபான ஊழலில் இவரும் ஒரு முக்கிய புள்ளி. இந்தியா திரும்பினால் கைதாவார் என்பதால், வெளிநாட்டிலேயே இருக்கிறார்' என, சொல்லப்படுகிறது. 'இவரும் விரைவில் பா.ஜ.,வில் இணைவார்' என, பேச்சு அடிபடுகிறது.

