வீடியோவால் இடமாற்றம், பணியிடை நீக்கம்; விசாரிப்பது தவறா என போலீசார் புலம்பல்
வீடியோவால் இடமாற்றம், பணியிடை நீக்கம்; விசாரிப்பது தவறா என போலீசார் புலம்பல்
ADDED : பிப் 22, 2025 08:04 AM

தமிழகத்தில் போலீசாரை குறிவைத்து சமூக வலைத்தளத்தில் ஆளாளுக்கு வீடியோ, 'அப்டேட்' செய்வது அதிகரித்துள்ளது. அது பரவுகிறது என்பதற்காக சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம் மற்றும் சஸ்பெண்ட் செய்கின்றனர். அதனால், கடமை தவறாமல் பணி செய்தால், இது தான் தண்டனையா என, போலீசார் புலம்புகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் இரவு, 7:30 மணியளவில் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விசாரித்தார். உரிய பதில் அளிக்காததால், 'நீங்கள் கணவன், மனைவியா?' என்று கேட்க, 'ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் தம்பதியாகத் தான் இருக்க வேண்டுமா?' என, அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை வீடியோவும் எடுத்தார்.
அதை சமூகவலைத்தளத்தில் அவர், 'அப்டேட்' செய்ய வீடியோ பரவியது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், போதை இளைஞரிடம், ஏட்டு விசாரித்த போது, தன் தலையை சுவரில் மோதச்செய்து காயப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். அந்த இளைஞனை கையால் அடித்து உட்காரும்படி ஏட்டு கூறினார். இதை, ஸ்டேஷனில் இளைஞனை ஏட்டு தாக்கியதாக, 'எடிட்' செய்து சமூகவலை தளத்தில் சிலர் அப்டேட் செய்தனர். இதுதொடர்பாக ஏட்டுவிடம் விசாரணை நடந்தது.
மெரினா பீச் விவகாரத்தில், அந்த போலீஸ்காரரை இடமாற்றியதற்கு 'இருவரும் கணவன், மனைவியா?' என கேட்டது தான் காரணம் என போலீஸ் இணைகமிஷனர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். இது, ஒட்டு மொத்த போலீசாரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போலீசார் கூறியதாவது:
போலீசார் பொது இடத்தில் மரியாதை குறைவாக நடந்து கொண்டனரா என்று தான் பார்க்க வேண்டும். அதைவிடுத்து வீடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல. இது தொடர்ந்தால், போலீசார் மீது ஆளாளுக்கு புகார் கொடுக்க ஆரம்பித்து விடுவர். பயம் போய் விடும். குற்றங்கள் அதிகரிக்கும். இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உரிய வழிமுறைகளை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-

