அதிக கட்டணத்தால் ஆர்வமில்லா பயணியர்: குமரியில் வீணாகும் சுற்றுலா படகுகள்
அதிக கட்டணத்தால் ஆர்வமில்லா பயணியர்: குமரியில் வீணாகும் சுற்றுலா படகுகள்
ADDED : ஆக 30, 2024 03:13 AM

நாகர்கோவில்: அதிக கட்டணத்தால் சுற்றுலா பயணியருக்கு ஆர்வமில்லாமல், கன்னியாகுமரியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு படகுகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு, பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 10 கோடி ரூபாய் செலவில் தாமிர பரணி, திருவள்ளுவர் என்ற இரண்டு அதிநவீன சொகுசு படகுகளை பூம்புகார் போக்குவரத்து கழகம் வாங்கியது.
350 ரூபாய் கட்டணம்
ஆனால் இவை சாதாரண படகுகளை போல அல்லாமல், சற்று நீளமாக உள்ளதால் விவேகானந்தர் பாறையில் இவற்றை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் சின்னமுட்டம் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. பின், கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை படகுகளை இயக்க முடிவு செய்து, கடந்த மே மாதம் துவங்கி வைக்கப்பட்டது.
இதற்காக நபர் ஒன்றுக்கு, 'ஏசி 'வசதியுடன் 450, சாதாரண இருக்கைக்கு 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதிக கட்டணம் காரணமாக சுற்றுலாப் பயணியர், இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
ஒரு சில நாட்கள் மட்டுமே கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இந்த படகு சென்று வந்தது. தற்போது கன்னியாகுமரி படகு துறையில் இந்த இரண்டு படகுகளும் கட்டி போடப்பட்டுள்ளன.
காற்றால் பாதிப்பு
கடல் உப்புக் காற்றின் தாக்கத்தால், அவை சிறிது, சிறிதாக அழிந்து கொண்டிருக்கின்றன.
கட்டணத்தை குறைத்து வட்டக்கோட்டைக்கு இந்த படகுகளை இயக்கும் பட்சத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணியர் வருவர் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதுபற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று, பூம்புகார் போக்குவரத்து கழக நிர்வாகம் கூறுகிறது.