தொல்லியல் துறையால் புதுப்பொலிவான திருச்சி திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு
தொல்லியல் துறையால் புதுப்பொலிவான திருச்சி திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு
UPDATED : மே 12, 2024 11:40 AM
ADDED : மே 12, 2024 05:34 AM

சென்னை: திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணற்றை, தமிழக தொல்லியல் துறை புனரமைத்து புதுப்பொலிவாக்கி உள்ளது.
தமிழகத்தில், 110 வரலாற்று சின்னங்களை, மாநில தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. அந்த வகையில், திருச்சி - துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை கிராமத்தில், பல்லவ மன்னன் தந்திவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில், இங்கு, 'மார்பிடுகு பெருங்கிணறு' என்ற பெயரில், ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு கட்டப்பட்டுள்ளது.
இதை, உள்ளூர் மக்கள், 'மாமியார் மருமகள் கிணறு' என்றும் கூறுகின்றனர். இது ஊர் மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கியதுடன், ஒரு பக்கத்தில் குளிப்பவர்களை மறுபக்கத்தில் குளிப்பவர்கள் பார்க்க முடியாது என்ற பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ள பெருமையும் உடையது. படிக்கட்டில் தமிழில் எண்கள் இடப்பட்டுள்ளன.
இது, 1976ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிணற்றில் உள்ள கல்வெட்டின் படி, தந்தி வர்மன் ஆட்சியில், ஆலம்பாக்கத்தை சேர்ந்த விசைய நல்லுாழான் என்பவரின் தம்பி கம்பன் அரையன் என்பவர், கி.பி 799ல் துவங்கி, 800ல் வெட்டி முடித்துள்ளார். இறை உருவ சிற்பங்கள், வாழ்வின் நிலையாமை கல்வெட்டு உள்ளிட்டவை உள்ளன.
இந்தக் கிணறை, 45 லட்சம் ரூபாய் செலவில், தொல்லியல் துறை பழமை மாறாமல் செப்பனிடும் பணியை, கடந்தாண்டு துவக்கி தற்போது முடித்துள்ளது. மேலும், கிணற்றை சுற்றி கம்பி வேலி, வரலாற்று குறிப்பு பலகைகள், காவலர் கூடம், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்துள்ளது.
மேலும், இக்கிணற்றை சுற்றியிருந்த மண்மேடை அகற்றி, 4 அடி ஆழத்தில் சமதளமாக்கி, புல்வெளியை அமைத்து, பார்வையாளர்கள் நடக்க, பாவு கற்களை பரப்பி உள்ளது. இரவில் ஒளிரும் விளக்குகளையும் அமைத்துள்ளது.
தற்போது, தொல்லியல் களங்களை அறியும் ஆர்வம் மாணவர்கள், பொதுமக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஸ்வஸ்திக் கிணறு, புனரமைக்கப்பட்ட பின், சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது.