ஆளுக்கு இரண்டரை ஆண்டு: இ.பி.எஸ்., தந்திரம் பலிக்குமா?
ஆளுக்கு இரண்டரை ஆண்டு: இ.பி.எஸ்., தந்திரம் பலிக்குமா?
ADDED : மார் 05, 2025 06:48 AM

தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கும் வகையில், அ.தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சு நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, கட்சிக்கு 120 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் வாயிலாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என எதிர்பார்த்தார். ஆனால், விஜயை நம்பி அரசியலில் ஆழம் பார்க்க, அந்த கட்சி தலைவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில், கடும் நெருக்கடியில் உள்ள அ.தி.மு.க., தரப்பு, ஆட்சியை பிடிக்க விஜயுடன் கைகோர்க்க விரும்புகிறது.
இதற்காக, விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாக ரகசிய பேச்சு நடத்தப்பட்டது; ஆனால், அதை விஜய் விரும்பவில்லை.
இந்நிலையில், இரண்டரை ஆண்டுகள் அ.தி.மு.க.,வும், மீதமுள்ள இரண்டரை ஆண்டு கள் த.வெ.க.,வும் ஆட்சியை நிர்வகிக்கும் வகையில், முதற்கட்ட பேச்சு துவங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க.,வில் சமீபத்தில் சேர்ந்த நிர்வாகி ஒருவர், இதற்காக, அ.தி.மு.க., முக்கிய புள்ளியின் மகனுடன் பேச்சு நடத்தி வருகிறார். அதற்கு விஜய் ஒப்புக்கொண்டால், த.வெ.க.,வின் தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' தருவதாகக் கூறி, பிரேமலதாவை ஏமாற்றியதுபோல, ஆட்சிக்கு வந்தபின், தங்களையும் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்பதோடு, திடுமென பா.ஜ.,வுடன் இணக்கமான போக்கை கையாள்வது போல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசத் துவங்கி இருப்பதும் த.வெ.க.,வை கடும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஒரே நேரத்தில் பா.ஜ.,வோடும், த.வெ.க.,வோடும் இணக்கமான போக்கை கையாளும் பழனிசாமியின் தந்திர அரசியல் அறிந்து, த.வெ.க., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.