தி.மு.க.,வில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உதயநிதி தயார்! விரைவில் 117 மா.செ.,க்கள் நியமனம்
தி.மு.க.,வில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உதயநிதி தயார்! விரைவில் 117 மா.செ.,க்கள் நியமனம்
ADDED : மே 10, 2024 05:29 AM

தி.மு.க., மாவட்ட செயலர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சில முடிவுகளை, அமைச்சரும், கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதி எடுக்க உள்ளதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்தபின், அமைச்சர் உதயநிதி குடும்பத்துடன் லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியான பின், தி.மு.க.,வில் நிர்வாக ரீதியாக அதிரடி மாற்றங்கள் இருக்கும் என, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. அமைச்சர்களில் பலர், மாவட்ட செயலர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு மாவட்ட செயலரும், 5 முதல் 6 சட்டசபை தொகுதிகளை கைவசம் வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டு
அவர்களால் மாவட்டம் முழுதும் சென்று, கட்சி பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், மற்றவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெற முடியாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக உள்ளது. இதையடுத்தே, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என, பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசனின் எல்லைக்குள், செங்கல்பட்டு மாவட்டமும் வருகிறது. ஆனால், செங்கல்பட்டு தனி மாவட்டமாகி விட்டது. ஆனாலும், இன்னும் புதிய மாவட்ட செயலர் நியமிக்கப்படவில்லை.
செங்கல்பட்டில் கட்சி கூட்டம் நடக்கும் போது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் என்று தான் பேசுகின்றனர். இது நிர்வாக ரீதியில் தவறான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சென்னை வடக்கு கிழக்கு மா.செ., மாதவரம் சுதர்சனம். ஆனால், அவரது மாவட்ட எல்லைக்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில சட்டசபை தொகுதிகள் வருகின்றன. இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள், சில மா.செ.,க்களின் அடாவடி செயல்பாடு குறித்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற உதயநிதியிடம் கட்சியினர் புகார் கூறினர்.
ஒரு மாவட்ட செயலரின் நிர்வாக எல்லைக்குள் நான்கைந்து சட்டசபை தொகுதிகள் வருவதால், அவர்களால் 'பூத் கமிட்டி' பணிகளை கூட முழுமையாக முடுக்கி விட முடியவில்லை. இதனால், பல மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
யோசனை
இதை சரி செய்ய, இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மா.செ., நியமிக்க வேண்டும். அப்படி செய்தால், கட்சி கட்டமைப்பு வலுப்பெறும், புதியவர்களுக்கும் மா.செ., வாய்ப்பு கிடைக்கும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி பேசியுள்ளார். அவரும் இந்த விஷயத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பின், உரிய நடவடிக்கை எடுக்கலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இரண்டு தொகுதிகளுக்கு ஒருவர் என, 117 மா.செ.,க்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில், இளைஞர் அணியை சேர்ந்த பலருக்கு வாய்ப்பளிக்க உதயநிதி முடிவு செய்துள்ளார். மேலும், தி.மு.க.,வில் மூன்று தலைமுறைகளாக கோலோச்சும் சீனியர்கள் பலரை கழற்றி விடவும் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே, இதுபோல நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் முயன்றபோது, கட்சியின் சீனியர்கள் பலர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டனர். ஆனால், கட்சிக்குள் இந்த மாற்றத்தை கொண்டு வரும் முடிவில் உதயநிதி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -