கல்வி, அரசு பணியில் 10.5 சதவீதத்திற்கு மேல் பலன் பெற்ற வன்னியர் சமூகம்: அரசு தகவல்
கல்வி, அரசு பணியில் 10.5 சதவீதத்திற்கு மேல் பலன் பெற்ற வன்னியர் சமூகம்: அரசு தகவல்
ADDED : ஆக 04, 2024 02:39 AM

சென்னை: கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில், 10.50 சதவீதத்திற்கும் மேல், வன்னியர் சமூகம் பலன் பெற்றிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் நீண்ட காலமாக போராடி வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான- எம்.பி.சி.,க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வன்னியர் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், 'ஒரு சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான தரவுகளை மாநில அரசு தர வேண்டும்' என்றது.
அதைத் தொடர்ந்து, வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்க, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது, வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.
'தி.மு.க.,வின் இந்த நாடகங்களை பாட்டாளி மக்கள் நன்கறிவர். காலம் வரும்போது சமூக நீதிக்கு எதிரான, நன்றி மறந்த தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்' என எச்சரித்தார்.
கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என பா.ம.க., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சென்னை அயனப்பாக்கத்தில் உள்ள கொண்டயன்கோட்டை மறவர் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விகளுக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை பதிலளித்துள்ளது.
அதில், அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகளில், எம்.பி.சி.,க்கான 20 சதவீத ஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும், வன்னியர் சமுதாயம், 10.50 சதவீதத்திற்கும் அதிகமாக பலன் பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் விபரங்கள் பட்டியலில் தரப் பட்டுள்ளன.
எம்.பி.சி.,க்கு மட்டுமே 20 சதவீதம்
எம்.பி.சி.,க்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டிலேயே வன்னியர் சமுதாயம் தான் அதிகம் பயனடைகிறது என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, 20 சதவீத எம்.பி.சி., ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், அந்தப் பட்டியலில் உள்ள சீர்மரபினர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் பாதிக்கப்படுவர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதை, நாங்கள் எதிர்க்கவில்லை. சீர்மரபினர் உள்ளிட்ட சமூகங்களுக்கு நியாயம் வேண்டும். எம்.பி.சி., 20 சதவீத இட ஒதுக்கீடு அப்படியே தொடர வேண்டும் என்பதே, எங்களின் கோரிக்கை.
- பொன் பாண்டியன்
நிர்வாகி, கொண்டயன் கோட்டை மறவர் சங்கம்
அரைகுறை புள்ளிவிபரம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளிவிபரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் வாயிலாக, வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. இந்த மோசடி கண்டிக்கத்தக்கது. எந்தவொரு பிரச்னையையும் திசை திருப்ப வேண்டும் என்றால், அதற்காக எதையும் செய்ய. தி.மு.க., தயங்காது என்பதற்கு, இந்த மோசடி புள்ளிவிபரங்களே உதாரணம்.
எம்.பி.சி., பிரிவு உருவாக்கப்பட்ட, 1989 முதல் இப்போது வரை, 35 ஆண்டுகளில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப்பிரிவுக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
- ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர்