விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.,வில் யாருக்கு 'சீட்?'
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க.,வில் யாருக்கு 'சீட்?'
ADDED : ஜூன் 11, 2024 01:18 AM

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தி.மு.க.,வில் 'சீட்' வாங்குவதில், அமைச்சர் பொன்முடி மகன் உட்பட, நான்கு பேர் மத்தியில் போட்டி நிலவுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட, அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், எம்.எல்.ஏ., பதவியை யாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
அறிவிப்பு
அதற்கு தோதாக விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்த புகழேந்தி இறந்து போனதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அவர் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார்.
இவரைப் போலவே கட்சியில் முக்கியஸ்தர்களாக இருக்கும் வேறு சிலரும், தொகுதியில் வேட்பாளராக முட்டி மோதுகின்றனர்.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயசந்திரன், மாநில விவசாய பிரிவு செயலர் அன்னியூர் சிவா ஆகிய இருவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், தொகுதியில் அந்த சமுதாய ஓட்டுகள் அதிகம் என்பதாலும், 'சீட்' பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் என்பவரும், சீட் பெற முயற்சிக்கிறார்.
விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருப்பதால், இடைத்தேர்தலில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தவதன் வாயிலாக வெற்றி எளிதாகும் என கட்சித் தலைமை யோசிக்கிறது.
ஆனாலும், அமைச்சர் பொன்முடி அழுத்தம் கொடுத்து கவுதம சிகாமணியை வேட்பாளராக்க முயற்சிப்பதால், மூத்த நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வேட்பாளரை முடிவு செய்ய கட்சி தலைமை முடிவெடுத்திருப்பதாக ஆளும் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வாய்ப்பு
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
விக்கிரவாண்டி தொகுதியில், 60 சதவீதம் வன்னியர் வாக்காளர்கள் உள்ளனர். இதர சமுதாயத்தினர், 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், 70 சதவீதம் பேர் இதர சமுதாயத்தை சேர்ந்தோர் தான் உள்ளனர்.
அதனால், தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இருக்கும் உடையார் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, தன் மகனுக்கு வாய்ப்பு கேட்கிறார்.
லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றபோதிலும், அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலுார் பகுதியில், அவருக்கு 2,000 ஓட்டுகள் குறைவாகவே கிடைத்துள்ளன.
முன்னிலை
கடந்த 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்ற வானுார், திண்டிவனம் போன்ற தொகுதிகளில், ரவிக்குமார் முன்னிலை பெற்றார்.
அதற்கு காரணம், தி.மு.க., கூட்டணிக்கு வன்னியர் அளித்த ஆதரவு தான். எனவே, வன்னியர் சமுதாய வேட்பாளரை தான் விக்கிரவாண்டியில் நிறுத்த வேண்டும் என, அச்சமுதாயத்தை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்திஉள்ளனர்.
இதற்கிடையில், இம்மாவட்டத்திற்கு இன்னும் பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. அதனால், இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க, 10 அமைச்சர்கள் அடங்கிய பணிக் குழுவை நியமிக்க, முதல்வர் முடிவு செய்துஉள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -