விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் மீது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தி
விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் மீது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : ஏப் 06, 2024 03:00 AM

விழுப்புரம் தொகுதியில், அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளை சமாதானபடுத்தும் பணிகள் துவங்கியது.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் தலைப்பில் மாநாடு நடந்தது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த மாநாட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது' என்றார்.
இந்நிலையில் அ.தி.மு.க., கூட்டணிக்கு முதலில் ஆதரவு தெரிவித்த புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாததால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இதனால், தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி கூறுகையில், 'அ.தி.மு.க., முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வரும் சட்டசபைத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என அதிருப்தி நிலவுகிறது. விழுப்புரத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
எஸ்.டி.பி.ஐ., பார்வார்டு பிளாக், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளை, முறைப்படி அழைக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் அழைப்பின் பேரில், நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் சண்முகத்தை மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், புரட்சி பாரதம் கட்சி மாநிலச் செயலாளர் சிலம்பரசன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, வேட்பாளர் தரப்பில் தங்கள் கட்சி நிர்வாகிகளை அலட்சியப்படுத்துவதாக அதிருப்தியை தெரிவித்தனர். அவர்களை அ.தி.மு.க., தரப்பில் சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்த அவர்கள் தேர்தல் பணி செய்வதாக உறுதி அளித்தனர்.
இதேபோல், எஸ்.டி.பி.ஐ., பார்வார்டு பிளாக் நிர்வாகிகளை சமாதானப்படுத்த அ.தி.மு.க., நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
- நமது நிருபர்-

