sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

விரிவாக்கத்துக்காக கோவை விமான நிலையம் காத்திருப்பு: இரு அரசுகளுக்குமே இருக்கிறது பொறுப்பு!

/

விரிவாக்கத்துக்காக கோவை விமான நிலையம் காத்திருப்பு: இரு அரசுகளுக்குமே இருக்கிறது பொறுப்பு!

விரிவாக்கத்துக்காக கோவை விமான நிலையம் காத்திருப்பு: இரு அரசுகளுக்குமே இருக்கிறது பொறுப்பு!

விரிவாக்கத்துக்காக கோவை விமான நிலையம் காத்திருப்பு: இரு அரசுகளுக்குமே இருக்கிறது பொறுப்பு!


UPDATED : மார் 28, 2024 06:44 AM

ADDED : மார் 28, 2024 03:32 AM

Google News

UPDATED : மார் 28, 2024 06:44 AM ADDED : மார் 28, 2024 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே மாதிரியான கோரிக்கையை, தொழில் மற்றும் சமூக அமைப்பினர் முன் வைப்பதும், மாறிமாறி வரும் வேட்பாளர்கள் 'கண்டிப்பாக நிறைவேற்றுவேன்' என்று மாறாத அதே வாக்குறுதியை அளிப்பதும், கோவை மக்களுக்கு சலிப்பையும், அலுப்பையும் அதை விட, அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டது.

இருப்பினும் சில தேவைகளை, மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியது, நம் கடமையாக உள்ளது. அதே நம்பிக்கையுடன் கோவையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தேவைகள், குறிப்பாக மத்திய அரசால் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் விரிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இந்த சிறப்புத் தொடர்:

ஒரு காலத்தில் 'ஜவுளி நகரம்' என்று மட்டுமே பெயர் பெற்றிருந்த கோவை, இப்போது டெக்ஸ்டைல்ஸ், பவுண்டரிஸ், இன்ஜினியரிங், ஜூவல்லரி, வெட்கிரைண்டர், வாகன உதிரிபாகங்கள், மோட்டார்கள் மற்றும் பம்ப்ஸ், தகவல் தொழில் நுட்பம் ஆகிய தொழில்களுடன் உயர்தர மருத்துவ சுற்றுலா, தரமான உயர் கல்வி நிறுவனங்கள் என பன்முகத்தன்மையுள்ள மாநகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சியால் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை, அந்நியச் செலாவணியாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாகவும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

சுயம்புவாக வளர்ந்த நகரம்!


சென்னையில் இயற்கைப் பேரிடர், அதீத வளர்ச்சி, பெங்களூருவில் தண்ணீர்ப் பிரச்னை, மற்ற நகரங்களில் மனிதவள தட்டுப்பாடு என பல தடங்கள் இருப்பதால், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள், கோவையில் கால் பதிக்கத் தயாராயிருக்கின்றன.

இங்கே வந்து ஆய்வு செய்கின்றன; ஆனால் இங்கே வர விரும்பும் பல நிறுவனங்கள், வராமல் திரும்புவதற்கு தடையாய் இருப்பது, விமானப் போக்குவரத்து வசதி குறைவு என்பதுதான்.

விமான நிலையமே முக்கியம்


இங்கே வெளிநாட்டு விமானங்கள் வராமலிருக்க பல காரணங்கள் இருக்கின்றன. முதற்காரணம், விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி வருவது தான்.

ஆண்டுக்கு 23 லட்சம் பயணிகளைக் கையாளும் கோவை விமான நிலையம், இன்று வரை பெயரளவுக்கே சர்வதேச விமான நிலையமாக உள்ளது.

இவர்களில் 10 சதவீதம் பேர், இங்கிருந்து வேறு நகரங்களுக்குச் சென்று, வெளிநாடுகளுக்கு விமானங்களில் மாறிச் செல்கின்றனர். இங்கிருந்து 22 உள்நாட்டு விமானங்களும், இரண்டே இரண்டு வெளிநாட்டு விமானங்களே இயக்கப்படுவதே இதற்குக் காரணம்.

ஓடுதளத்தின் நீளத்தை அதிகப்படுத்தாமல், பெரிய விமானங்கள் இங்கே இறங்க முடியாது என்பதால், விரிவாக்கத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.

2010ல், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதன்பின் பத்தாண்டுகளாக இந்தப் பணி, மிகவும் மெதுவாக நடந்து வந்தது.

6 ஆண்டு...ரூ.2089 கோடி ஒதுக்கீடு


கடந்த 2021ல், ஆட்சி மாற்றத்துக்குப் பின் வேகமடைந்தது. அ.தி.மு.க., ஆட்சியில், 2011-2016 வரை எந்த நிதியும் இதற்கு ஒதுக்கப்படாத நிலையில், 2018 லிருந்து 2021 வரை, ரூ.573 கோடி நிதி ஒதுக்கப்பட்டது; கடந்த மூன்றாண்டுகளில் ரூ.1515 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை 2,088 கோடியே 92 லட்ச ரூபாய், தமிழக அரசால் இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கத்துக்கு முதலில் விமான நிலையம் கோரிய, 627.89 ஏக்கர் நிலத்தில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலமும் உள்ளடங்கியுள்ளது.

தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின்படி, இந்த நிலத்தையும், மாநில அரசே எடுத்துத் தர வேண்டும். ஆனால் தமிழக அரசு, அதை மத்திய அரசுத் துறைகளுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ள கடிதம் அனுப்பியுள்ளது.

ஆணையம் அதை ஏற்கவில்லை. அந்த நிலத்தைத் தவிர்த்து, 558 ஏக்கர் பட்டா நிலத்தில், வழக்கில் உள்ள 10 ஏக்கர் தவிர்த்து எல்லா நிலங்களையும், தமிழக அரசு கையகப்படுத்தி விட்டது. ஆனால் அதற்கும் முன்பே, மொத்த நிலத்திலும் விரிவாக்கப்பணியை மேற்கொள்வதற்கு, கடந்த செப்.,11ல், கோவை கலெக்டரால் செயல்முறை ஆணை (Enter upon Permission) வழங்கப்பட்டு விட்டது.

வேலையை துவக்கலாம்!


இதன் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசின் வருவாய்த்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமீபத்தில் வாங்கப்பட்ட தகவலின்படி, 'மொத்தமாக 652 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தித் தருமாறு, விமான நிலைய ஆணையம் கோரியது. பட்டா நிலம் உட்பட, அனைத்து நிலத்திலும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து விட்டது' என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 'விரிவாக்கப்பணிக்காக விமான நிலைய ஆணையத்திற்கு நிலத்தை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை அரசு வகுக்கும் வரை, அந்த நிலங்களை வேறு எந்த கம்பெனிக்கோ, ஏஜென்சிக்கோ மாற்றக்கூடாது; குத்தகைக்கு அல்லது உள் குத்தகைக்கும் விடக்கூடாது' என்ற நிபந்தனை காரணமாக, இந்த நிலத்தை இதுவரை, விமான நிலைய ஆணையம் எடுத்துக் கொள்ளவில்லை.

அப்போதே முடித்திருக்கலாம்!


மத்திய, மாநில அரசுகளின் இந்த மோதல் போக்கால், கோவை விமான நிலைய விரிவாக்கம் ஆண்டுக் கணக்கில் தாமதமாகி வருகிறது. 2016க்குப் பின், மத்திய, மாநில அரசுகள் ஒரே கூட்டணியில் இணக்கமாக இருந்தபோதே, நிலம் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தால், விரிவாக்கப்பணி அப்போதே துவங்கி, இப்போது முடிந்திருக்கும்.

இப்போது நிலம் கையகப்படுத்திக் கொடுத்தாலும், இரு அரசுகளுக்குள் இணக்கம் இல்லாததால், தேவையற்ற நிபந்தனைகள், அவசியமற்ற காரணங்கள் சொல்லி, விரிவாக்கப் பணி தள்ளிப்போகிறது. இதை விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு, இரண்டு அரசுகளுக்குமே உள்ளது.

இதில் மோதல் தேவையற்றது. புதிய எம்.பி., மற்ற எல்லா விஷயங்களையும் விட, விமான நிலைய விரிவாக்கத்தை வேகப்படுத்தவும், இங்கிருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் அதிகளவில் இங்கு வந்து இறங்கினால் தான், கோவையின் வளர்ச்சி 'டேக் ஆப்' ஆகும்!

-----விரைவில் நல்ல செய்தி வரும்!

பணிகளைத் துவக்குவதற்கு அனுமதி அளிக்கும் செயல்முறை ஆணை, நிபந்தனைகளோடு வழங்கப் பட்டதால், ஏற்பளிப்பு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமுமில்லை. சிவில் ஏவியேஷன் கொள்கை 2016ன் படி, எவ்வித வில்லங்கமோ, தடையோ இன்றி கொடுத்தால் மட்டுமே ஏற்க முடியும். எனவேதான் இதுவரை ஏற்பளிப்பு செய்யவில்லை. இரு வாரங்களுக்கு முன், விமான நிலைய ஆணையத்தின் தலைவர் தமிழகம் வந்திருந்தார். தலைமைச் செயலாளருடன் சந்திப்பு நடந்தது. அதனால் ஒரு சுமுக முடிவு கிடைத்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வந்திருக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் சற்று தள்ளிப்போகிறது. தேர்தல் முடிந்ததும், நல்ல செய்தி கிடைக்கும். இவ்விவகாரம் மிக விரைவிலேயே நல்ல முடிவுக்கு வந்துவிடும்.

-செந்தில் வளவன்

இயக்குனர், கோவை விமான நிலையம்

வெளிநாட்டு விமான சேவை!

விரிவாக்கத்துக்கு முன்பே, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான விமான சேவையை அதிகரிக்க வேண்டுமென்று, இங்குள்ள தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். துபாய், தோஹா போன்ற நாடுகளுக்கு விமான சேவையை வழங்கினால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்பது ஒரு முக்கியக் கோரிக்கை.மும்பைக்கு முன்பு மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆறு விமானங்கள் இயக்கப்படுவதால், பலரும் இங்கிருந்து மும்பை சென்று வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதேபோல, டில்லிக்கு இப்போதுள்ள மூன்று விமானங்களுடன் மேலும் மூன்றை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், டில்லி சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமென்றும் வலியுறுத்துகின்றனர்.



திட்ட அறிக்கை தயார்; பணியைச் செய்வது யார்?

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை, கடந்த 2022 டிசம்பரிலேயே தயாராகி விட்டது. அடுத்த 15 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, டில்லியைச் சேர்ந்த 'ஜியான் பி.மாத்துார் அசோசியேட்ஸ்' என்ற ஆர்க்கிடெக்ட் நிறுவனம், இரு கட்டங்களாகச் செயல்படுத்தும் வகையில், திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது.முதற்கட்டத்தில் (பேஸ் 1) 809 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ளவும், இரண்டாம் கட்டத்தில் (பேஸ் 2) ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் மேற்கொள்ளவும், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மாஸ்டர் பிளான்படி, ஒரு மணி நேரத்திற்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட கட்டமைப்பாக, கோவை விமான நிலையம் மாற்றப்படும். பணிகள் 18 லிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்படும். திட்ட அறிக்கை தயார் என்பதால், நிலம் வந்ததும் டெண்டர் விடப்பட்டு, பணியை மேற்கொள்ளும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.



என்னென்ன வசதிகள்?

புதிய முனையம், 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு தளங்கள், 10 நுழைவாயில்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு, ஐ.டி.,செயல்பாடுகள், முகப்புத் தோற்றங்கள், சோலார் சிஸ்டம், மல்டி லெவல் கார் பார்க்கிங், கழிவுநீர் சுத்திகரிப்பு, பயணிகளுக்கான லிப்ட், எஸ்கலேட்டர், விளக்கு வடிவமைப்புகள், வணிக மையம், கன்வென்ஷன் சென்டர், அணுகுசாலைக் கட்டமைப்புகள் என விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us