மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.,வின் அடுத்த நடவடிக்கை என்ன?
மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.,வின் அடுத்த நடவடிக்கை என்ன?
ADDED : பிப் 14, 2025 11:51 PM

இம்பால்: மணிப்பூரின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்களிடையே கட்சி மேலிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாததால், சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்த நடவடிக்கை குறித்து, இப்போது அனைவரது கவனமும் திரும்பி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. 21 மாதங்களாக நீடித்து வரும் மோதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூர் முதல்வராக இருந்த, பா.ஜ.,வின் பைரேன் சிங் சமீபத்தில் திடீரென ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ., வடகிழக்கு மாநில பொறுப்பாளரான சம்பித் பத்ரா அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் எம்.எல்.ஏ.,க்களிடம் ஆலோசனை நடத்திய போதும், அவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை. பலருக்கு முதல்வர் பதவி மீது கண் உள்ளது.
மாநிலத்தில் குழப்பத்தை தடுக்க, சட்டசபை முடக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் அரசியல் நிலைமை குறித்து மாநில பா.ஜ., தலைவர் ஷரதா கூறுகையில், “அரசியலமைப்பு சட்டப்படி சட்டசபை முடக்கப்பட்டுள்ளது. கலைக்கப்படவில்லை. 2027 வரை மணிப்பூர் சட்டசபை பதவிக்காலம் உள்ளது.
“நிலைமை சீரடைந்தவுடன், சபையை மீண்டும் துவங்க முடியும்,” என்றார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.