குஜராத்தில் சிக்கியவர்கள் யார்? இதுவரை வெளிவராத பின்னணி
குஜராத்தில் சிக்கியவர்கள் யார்? இதுவரை வெளிவராத பின்னணி
UPDATED : மே 26, 2024 04:24 AM
ADDED : மே 26, 2024 01:23 AM

இலங்கையின் ஐ.எஸ்.கே.பி., அமைப்பை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள், சென்னை வழியாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தபோது விமான நிலையத்தில் பிடிபட்டனர். குஜராத்திலும் மற்ற இடங்களிலும் பயங்கரவாத செயல்களை நிறைவேற்றும் திட்டத்தோடு அவர்கள் வந்ததை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு துரிதமாக கண்டறிந்து நான்கு பேரையும் கைது செய்தது.
இலங்கை காவல் துறை தலைவர் தேசபந்து தென்னகோன், குற்றவியல் புலனாய்வு துறை டி.ஐ.ஜி., மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், ஆமதாபாத் நகரில் சிக்கிய ஐ.எஸ்.கே.பி., பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, இந்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாவது:
உலகம் முழுதும் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அபுபக்கர் அல்பக்தாதி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு. இதன் அடிப்படை கொள்கையே, மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும். இல்லையேல், முஸ்லிம் ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும்.
உயிரோட்டமாக
சிரியா, ஈராக்கில் இந்த அமைப்பு வேகமாக பரவி வருகிறது. அங்கு ஐ.எஸ்., என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்.கே.பி., எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது.
அபுபக்கர் அல்பக்தாதி இந்த இயக்கத்தின் மன்னர் போன்ற அந்தஸ்தில் இருந்தார். அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருந்தனர். ஒரு கட்டத்தில் சிரியாவில் இருந்த அவரை, அமெரிக்க படை சுட்டு வீழ்த்தியது. ஆனால், இயக்கம் ஓயவில்லை. இன்று வரை உயிரோட்டமாக செயல்படுகிறது. தற்போது, அதன் தலைவராக அபு ஹப்ஸ் அல்-ஹாஸிமி அல்-குரேஷி இருக்கிறார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் ஐந்தாவது தலைமை அமீர், அதாவது குரு.
இலங்கையின் கிழக்கு பகுதியில் மட்டக்களப்பு மாகாணத்தில் உள்ள காத்தாங்குடி, இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இடம். 'நேஷனல் தவுஹித் ஜமாத்' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த காத்தாங்குடி ஷஹரான் ஹாஸ்மின் என்பவர், ஐ.எஸ்., அமைப்பினருடன் சேர்ந்து செயல்பட துவங்கினார். ஒரு கட்டத்தில், நேஷனல் தவுஹித் ஜமாத் அமைப்பினர் தமிழகத்திலும் கால் பதித்தனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் இந்திய மாணவர் கூட்டமைப்பு எனும் எஸ்.எப்.ஐ., அமைப்பின் தலைவர் தமீம் அன்சாரி.
கடந்த 2012ல், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துாதரக அதிகாரி அமீர் ஜுபைர் சித்திக், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துணை துாதரகம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு கேந்திரங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வேலையில், தமீம் அன்சாரியை ஈடுபடுத்தினார். இதை அறிந்த இந்திய உளவு அமைப்பினர், தமீம் அன்சாரியை கைது செய்தனர்.
அடுத்ததாக, பாகிஸ்தான் துாதரக அதிகாரி அமீர் ஜுபைர் சித்திக், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதி ஜாகீர் உசேன் என்பவரை தமிழகத்துக்கு அனுப்பி, உளவு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். ஜாகிர் உசேனும் போலீசிடம் சிக்கினார். அதையடுத்து, அருண் செல்வராஜ் என்ற இலங்கை நபர் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில் தான், இலங்கையின் நேஷனல் தவுஹித் ஜமாத் அமைப்பு தமிழகத்தில் வேகமாக ஊடுருவியது. அதன் தலைவர் ஷஹ்ரான் ஹாஸ்மினின் பயங்கரவாத ஆதரவு பேச்சிலும், ஜிகாதி கொள்கைகளிலும் மயங்கிய தமிழக இளைஞர்கள் பலரும் அந்த ஜமாத்துடன் தொடர்புகளை வளர்த்து கொண்டனர்.
திருச்சூர் சிறைக்கு
அவர்களில் முக்கியமானவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகம்மது அசாருதீன். அவரும் மற்றும் சில இளைஞர்களும் 'கிலாபா ஜீ எப் எக்ஸ்' என்ற முகநுால் பக்கத்தில், ஷஹ்ரானின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு, அவரது கொள்கைகளை தமிழகம் மற்றும் கேரளாவில் பரப்பினர்.
இதற்கிடையில், ஷஹ்ரான் ஹாஸ்மின், 2019 ஏப்., 21ல் ஈஸ்டர் தினத்தில், இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினார். ஷாங்கிரிலா நட்சத்திர விடுதியில் நடந்த குண்டு வெடிப்பில் அவரும் இறந்தார். அதன்பின், அவரது உறவினர் ஒருவர், நேஷனல் தவுஹித் ஜமாத் அமைப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் கொச்சி கிளை, ஷஹ்ரான் ஹாஸ்மினுடன் இணைந்து செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த முகமது அசாருதீன், அக்ரம் சிந்தா உள்ளிட்ட பலர் மீது, 2019 மே 30ம் தேதி வழக்கு பதிவு செய்து, தீவிர நடவடிக்கை எடுத்தது.
அசாருதீன் தலைமையில் செயல்பட்ட குழுவில் தான் கோவை ஜமேஷா மூபின் இருந்தார். கேரளாவின் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்ட அசாருதீனை அடிக்கடி சென்று பார்த்து திரும்பிய ஜமேஷா முபின், 2022 அக்., 23ல் கோவையில் கார் குண்டு வெடிப்பில் இறந்தார்.
அதை தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகளால், ஜமேஷா மூபின் கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்.கே.பி., எனும் இஸ்லாமிக் ஸ்டேட் கோராஸான் புராவின்ஸ் என்ற அமைப்பிற்காக, பைய்யத் எனும் உறுதிமொழியை ஏற்று, அதன் வழியில் செயல்படும் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கான வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பண உதவி
ஷஹ்ரான் ஹாஸ்மின், இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு முன், பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களை அமைத்து, பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளது கண்டறியப்பட்டது.
குஜராத்தில் சிக்கிய முகமது நுஸ்ரத், முகமது நுப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரிஸ் ஆகியோர், ஐ.எஸ்.கே.பி., அமைப்பை சேர்ந்தவர்கள். அதற்கு முன், ஷஹ்ரான் ஹாஸ்மினின் நேஷனல் தவுஹித் ஜமாத் அமைப்பில் செயல்பட்டவர்கள்.
இதில் முகமது நுப்ரான், சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார். இவர் சென்னை மற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று உளவு பார்த்துள்ளார்.
ஆமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஐ.எஸ்.கே.பி., அமைப்பினர் பண உதவி, ஆயுதங்கள் வழங்கியுள்ளனர். நான்கு பேரிடம் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிகளும் குண்டுகளும் பாகிஸ்தானை சேர்ந்தவை.
தீவிர விசாரணை
பாகிஸ்தானில், கடந்த ஜூலையில் ஜமா - அத் உலமா - -ஏ- பாஷல் என்ற அமைப்பினர், தேர்தல் பிரசார ஊர்வலம் நடத்தினர். இதில், ஐ.எஸ்.கே.பி., அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 54 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நேரத்தில், ஆமதாபாத்தில் நான்கு பேர் சிக்கியது குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் இலங்கை பார்லிமென்டுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இலங்கையிலும் அசம்பாவிதங்களை நிறைவேற்றக் காத்திருக்கும் ஐ.எஸ்.கே.பி., அமைப்பினர் பற்றிய முழு தகவல்கள், அந்நாட்டு அரசால் திரட்டப்படுகின்றன.
ஆமதாபாத்துக்கு இலங்கையிலிருந்து வந்திறங்கிய பயங்கரவாதிகள் குறித்து முழுமையாக விசாரிக்கவே குழு அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையைத் துவங்கி உள்ளனர்.
இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இலங்கையில் இருந்து கிளம்பும் தீவிரவாதிகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றனர். இல்லையென்றால், நிறைய அசம்பாவிதங்கள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டிருக்கும்.
இவ்வாறு உளவு அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -