ADDED : மே 05, 2024 12:35 AM

புதுடில்லி: மத்திய அரசில் மிகவும், 'பவர்புல்' பதவி என கூறப்படுவது, பிரதமரின் தலைமை ஆலோசகர் பதவி. பிரதமர் அலுவலகத்தை இவர் தான் நடத்துவார். உளவுத்துறை அறிக்கைகள் உட்பட பல முக்கியமான விஷயங்கள் இவர் வசம் இருக்கும். வழக்கமாக இந்த பதவியில் இருப்பவர்கள், பிரதமருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருப்பர்.
தற்போது இந்த பதவியில் இருப்பவர், பிரமோத் குமார் மிஸ்ரா; 76 வயதாகும் இவர், 1972 பேட்ச் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவருக்கு வயதாகி விட்டது. அத்துடன், உடல்நிலையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.
'லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமரானால், மிஸ்ரா மீண்டும் தலைமை ஆலோசகர் பதவியில் இருக்க மாட்டார்' என்கிறது டில்லி அதிகாரிகள் வட்டாரம்.
'மத்திய அரசின் முக்கிய பதவியில் உள்ள அந்த தமிழக அதிகாரிக்கு, பிரதமரின் தலைமை ஆலோசகர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது' என, அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.
'இந்த அதிகாரி, பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, மோடிக்கு உதவியாக இருந்தவர் என சொல்லப்படுகிறது. இவர் தான் அடுத்த பிரதமரின் தலைமை ஆலோசகர்' எனவும் அடித்து சொல்கின்றனர்.
ஒரு வேளை அந்த பதவி கிடைக்காவிட்டால், அடுத்த பவர்புல் பதவியான, கேபினட் செயலர் பதவிக்கு, இந்த தமிழக அதிகாரி நியமிக்கப்படலாம் என்கின்றனர்.