UPDATED : ஜூலை 30, 2024 03:51 AM
ADDED : ஜூலை 30, 2024 01:51 AM

பயிற்சி மைய விவகாரம் வெடித்துள்ள நிலையில், அந்த பயிற்சி மையத்தில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடன் படித்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம், மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ள நிலையில், மையங்களில் போதிய வசதிகள் இல்லாதது, நீண்டகால உறுத்தலாகவே இருந்துள்ளது.
பயிற்சி மையம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தால், அலட்சியத்தால், மூன்று இளம் உயிர்கள் பலியானது, சக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கும் தலா, 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களுடைய முக்கிய கோரிக்கை. அதுவும், பயிற்சி மையம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துக்கு பயிற்சி மையம் மற்றும் அரசு அதிகாரிகளை பொறுப்பாக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பயிற்சி மையம் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு உடந்தையாக இருந்து, தடையில்லா சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், அவர்களுடைய வலியுறுத்தல்களில் ஒன்று.
மாணவர்களின் கோபம் பயிற்சி மையத்தின் மீதே அதிகமாக உள்ளது, அவர்களுடைய கருத்துகளில் இருந்து தெரிகிறது.
ஒரு பக்கம் இந்தச் சம்பவம் அரசியலாக்கப்பட்டாலும், விதிமீறல்கள், அலட்சியம், மெத்தனப்போக்கு ஆகியவையே மாணவர்களின் போராட்டத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -