UPDATED : ஏப் 17, 2024 07:23 AM
ADDED : ஏப் 17, 2024 12:34 AM

பா.ஜ., தேர்தல் அறிக்கையில், 'இந்தியாவின் பண்பாட்டை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுதும் கொண்டுசேர்த்து பயிற்சி அளிக்கும் விதமாகவும், உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை நிறுவுவோம்' என்று தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக, பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது திருவள்ளுவர் பெயரிலேயே, பண்பாட்டு மையங்களை உலகெங்கும் அமைக்க அவர் முன்வந்திருக்கிறார். திருக்குறளிலும், திருவள்ளுவரிடத்தும் அப்படி என்ன அற்புதத்தை பிரதமர் மோடி கண்டார்?
திருக்குறளை ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்க, புதிய பரிமாணங்கள் விரிந்துகொண்டே போகின்றன என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.
மானுட பொதுமை
எவ்வளவு பெரிய புலவராக இருந்தாலும், ஏதாவதொரு வகையில் தன்னுடைய ஊரையோ அமைப்பையோ வட்டாரத்தையோ சிலாகித்துப் பேசாமல் இருப்பதென்பது கடினம். 'கங்கையில் புனிதமாய காவிரி' என்ற பிரதேசப் பிடிமானமாகவோ, ஐந்தினையைப் பாடும்போது தொல்காப்பியம் சுட்டுகிற வட்டாரப் பிடிமானமாகவோ அவை இருக்கக்கூடும்.
ஆயின், இப்படிப்பட்ட பிடிமானங்களுக்கு அப்பாற்பட்டு, நடுவுநிலைமையில் நின்று, மானுடப் பொதுமையை மட்டுமே சிந்திக்கிறார் என்பதுதான் வள்ளுவப் பேராசானின் தனிப்பெருமை!
தனிமனித வாழ்க்கையிலும் சரி, சமுதாய வாழ்க்கையிலும் சரி, எவற்றையெல்லாம் கொள்ளவேண்டும், எவற்றையெல்லாம் தள்ளவேண்டும் என்பதை வள்ளுவர் குறிப்பிடுகிறார். அப்படியானால், நீதிகளைக் கூறுகிறார்.
கல்வி அவசியம்
சரி, இதிலென்ன வியப்பு? எத்தனையோ பேர், நீதிகளை, நெறிகளைக் கூறியிருக்கிறார்களே, அவர்களுக்கும் வள்ளுவப் பேராசானுக்கும் என்ன வேறுபாடு? பெரும்பாலான சான்றோர்களும் சரி, நீதி நுால்களும் சரி, தத்தம் சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு நீதிகளைக் கூறுவர்.
ஆனால், எல்லோருக்கும் எப்போதும் எங்கேயும் பொருந்தக்கூடிய வகையில், தம்முடைய கொள்கைகளை வள்ளுவர் வகுத்துத் தருகிறார் என்பதுதான் வியப்பு!
இதனாலேயே எந்தக் காலத்திற்கும், எந்த ஊருக்கும் எந்த இனத்திற்கும், எந்த மொழிக்கும் பொதுவான வாழ்வியல் விளக்கமாகத் திருக்குறள் அமைந்துவிடுகிறது. 'இன்பமும் துன்பமும் என்னும் இவையிரண்டும் மன்பதைக்கெல்லாம் மனமகிழ அன்பொழியாது உள்ளி உணர உரைத்தாரே' என்று இதனைப் பாராட்டுகிறார் மதுரை வாணிகன் இளவேட்டனார்.
அனைத்து சாராருக்கும் உரிய பண்பாகவும் நோக்கமாகவும் கல்வியைத் திருவள்ளுவர் வைப்பதிலிருந்தே, அவரின் பொதுமைத் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.
யாரோ சிலர் மட்டுமே கல்விக்குரியவர்கள் என்னும் பிறழ்வெண்ணத்திலிருந்து சமுதாயத்தை மடைமாற்றம் செய்கிறார். கல்வி கற்றவர்கள், கற்றவற்றை உணர்ந்து, யாருக்கும் அஞ்சாமல், அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதே, கல்வி குறித்த வள்ளுவர் கருத்தாக உள்ளது.
எந்த வகையில் செயல்படுபவர்க்கும் கல்வி அவசியம். மருத்துவராயினும், துாதுவராயினும், அமைச்சராயினும், ஆள்பவராயினும் கல்வி அவசியம். எல்லோருக்குமான கல்வி வாய்ப்புகளை, அரசு கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிற வள்ளுவர், கல்லாதவர்களை உடன் சேர்த்துக் கொள்ளும் அரசரை சாடவும் தயங்கினாரில்லை.
கல்லார்ப் பிணிக்கும்
கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை
கடுங்கோலாக இருக்கிற ஆட்சியானது, கல்லாதவர்களைத் தன்னோடும் தனக்கு அரணாகவும் சேர்த்துக் கொள்ளும்; அப்படிப்பட்ட அரசானது, பூமிக்கே பாரம்.
இந்தச் சொற்கள் சற்றே கடுமையாகத் தெரிந்தாலும்கூட, குடும்ப நிலை, பொருளாதாரச் சூழல், சமூக நிலை போன்றவற்றையெல்லாம் கடந்து நிற்கிற கல்வியின் பெருமையையும், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லோருக்கும் கல்வி என்னும் பொதுநோக்கில் வள்ளுவர் மிளிர்கிறார் என்பதையும் மறுக்க முடியவில்லை.
சுமப்பது யார்
உலகமே, மானுட இனத்திற்கான வாழ்வாதாரம். உலக உருண்டையைப் பற்றி, வெவ்வேறு சமயங்கள், வெவ்வேறு கருத்துகளைக் கூறும். ஆதிசேஷன் என்னும் பாம்பின் தலைமீது பூமி இருப்பதாக, புராணங்கள் கூறுகின்றன.
கிரேக்க மரபு, பூமியின் பாரத்தை அட்லஸ் என்பவர் சுமப்பதாக வரையறுத்தன. அரேபியப் பாரம்பரியம், பஹமூத் என்னும் மீன், உலகையும், உலகைச் சுமக்கிற காளையையும், உலகைத் தொட்டு நிற்கிற தேவதையையும் தானே சுமந்து ஆதாரம் தருவதாகக் காட்டும். இன்னும் சில மரபுகளில், ஆமைகளும் மீன்களும் இவ்வாறு தாங்கியிருப்பதான தகவல்கள் உண்டு.
ஜப்பானிய அய்னு மக்கள், பெருமீன் ஒன்றின் முதுகெலும்பில் உலகம் உறுதியுடன் நின்றிருப்பதாக நம்புகின்றனர்.
குறுமனிதர்கள் நால்வர், நான்கு மூலைகளில் உலகை தாங்கியிருப்பதாக நோர்ஸ் இனத்தார் நினைக்க, பகாப்-கள் என்னும் தேவலோக நாயகர்கள் நால்வர் இதைச் செய்வதாக மாயன் இனத்தார் எண்ணினர். இத்தகைய சமய- வழிபாட்டு- ஆன்மிக நம்பிக்கைகளுக்குள், வள்ளுவர் அகப்படவில்லை.
உலகை யார் சுமக்கிறார்கள்? யார் நிலைப்படுத்துகிறார்கள்?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
'பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்' என்றே இதற்கு விளக்கம் தருகிறார் மு.வரதராசனார்.
பண்பு என்பது யாருக்கானது? தனி இனத்திற்கோ, தனி கூட்டத்திற்கோ சொந்தமானதா பண்பு? மானுடர்கள் அனைவருக்கும் பொதுவானதன்றோ? உலகம் நிலைப்பதற்குக் காரணம் என்று 'பண்புடைய மக்கள்' அனைவருமே என்று கூறுவதில்தான் வள்ளுவப் பேராசானின் பொதுமைப் பெருமையைக் காண்கிறோம்.
யார் துறவி
துறவுத்தன்மையைக் குறித்து வள்ளுவருக்கு நிரம்ப மரியாதை இருந்திருக்கிறது. துறவிகள் என்னும்போதே, அவர்களை ஏதோவொரு சமயம் சார்ந்தவராகக் காண்பதே உலக வழக்கம்.
ஆனாலும், துறவும் துறவியரும் எப்படி இருக்கவேண்டும் என்பதிலும், அவருடைய நோக்கம், பொதுமை நோக்கையே கொள்கிறது. இதனால்தான்,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்று நேர்பட உரைக்கிறார். உலகிற்கு, அதாவது, தம்மைச் சுற்றி உள்ள உலகிற்கு, உலகின் மக்களுக்கு, உலக உயிர்களுக்கு நன்மை செய்பவர், இவ்வாறு நன்மை செய்வதற்காகத் தம்மையும் தம்முடைய தேவைகளையும் சுருக்கிக் கட்டிவிடுபவர் ஆகிய இப்படிப்பட்டவரே துறவி என்பவர்.
புறத்தோற்றத்தில் துறவியாக இல்லையெனினும், தம்முடைய செயல்பாடுகளில் உலக நன்மையை, உலகப் பொதுநோக்கை யார் கொள்ளுகிறாரோ அவரே துறவி. இப்படிப்பட்டவர்கள், பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகப் பற்பல துன்பங்களையும் பொறுத்துக்கொள்வர் என்றும் மொழிகிறார்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்று இதனை விளக்கும்போது, சமயம், நம்பிக்கை, வழிபாடு, புறச் சார்புகள் ஆகிய யாவற்றையும் கடந்து ஓங்குகிற வள்ளுவப் பேராசானின் பொதுமை, வள்ளுவத்தின் வாய்மை ஆகியன, பிரிவுகளையும் எல்லைகளையும் கடந்து விரிவதை உணர்கிறோம்.
இத்தகைய பொதுமை உணர்வை உலகில் வேறு எந்த பேராசானும் சொன்னதில்லை. சொன்னவர் நம் தமிழ்க்கவி. பிரதமர் மோடிக்கு இத்தகைய பரந்துபட்ட, சாய்வுகளே அற்ற பார்வை தான் ஈர்த்திருக்க வேண்டும். அதனால்தான், மேடைதோறும், திருக்குறளை மோடி முன்னெடுக்கிறாரோ?

