'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் குளறுபடி ஏன்? தேசிய தேர்வு முகமை சந்திக்கும் சவால்கள்
'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் குளறுபடி ஏன்? தேசிய தேர்வு முகமை சந்திக்கும் சவால்கள்
ADDED : ஜூலை 02, 2024 03:15 AM

நேரடியான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி, பிற கல்வி நிறுவனங்களை நம்பி, நுழைவு தேர்வுகளை நடத்த வேண்டியுள்ளதால், தேசிய தேர்வு முகமை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.
கடந்த 2013க்கு முன்னர் வரை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய மருத்துவ படிப்புக்கு முந்தைய தேர்வு என்ற, ஏ.ஐ.பி.எம்.டி., நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.
இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் நுழைவுத்தேர்வு தனியாக நடத்தப்பட்டது.
அதன்பின், 2013ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, மீண்டும், ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வாக மாற்றப்பட்டது.
இதில், 2015ம் ஆண்டு தேர்வில், ஹரியானாவில் உள்ளாடைக்குள் சிம் கார்டு மற்றும் ப்ளூடூத் எடுத்து வந்து, தேர்வில் முறைகேடு செய்தது அம்பலமானது.
அதனால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதன் பிறகே, அதே ஆண்டில், மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆடை, ஆபரண கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016ல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு கட்டாயமானது.
சவால்கள் என்ன?
இதை, சி.பி.எஸ்.இ., தான் நடத்தியது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வினாத்தாள்கள் உள்ளதாக, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்வு குறித்து, ஆங்காங்கே சில முறைகேடு புகார்களும் எழுந்தன.
அதனால், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், 2018ல் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., அமைக்கப்பட்டு, 2019 முதல் அதன் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில், தேசிய அளவில், அனைத்து உயர்கல்வி படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக, 20க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகளை, என்.டி.ஏ., நடத்துகிறது.
இத்தனை தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம் பெற்றிருந்தாலும், என்.டி.ஏ., தேர்வு நடத்தும் அரசு ஏஜன்சியாகவே செயல்படுகிறது. அதன் நேரடி கட்டுப்பாட்டில், எந்த கல்வி நிறுவனங்களும் கிடையாது.
ஏற்கனவே, சி.பி.எஸ்.இ., வாயிலாக, நீட் தேர்வு நடத்தப்பட்டது என்றால், சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரத்தில், நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கவும், கண்காணிப்பாளர்கள் நியமிக்கவும், சிறந்த கட்டமைப்பு இருந்தது. என்.டி.ஏ.,வுக்கு இதுபோன்ற எந்த கட்டமைப்பும் இல்லை.
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகள்.
பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற சட்டக்கல்லுாரிகள், யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற நிகர்நிலை பல்கலைகள் என, பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களை சார்ந்தே, என்.டி.ஏ., இயங்க வேண்டியுள்ளது.
தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள், மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாநில பொறுப்பு அதிகாரிகள் என, எல்லா பொறுப்புகளும், பிற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகளை நம்பியே நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
நுழைவு தேர்வுக்கான வினாத்தாள் உருவாக்குதல், வினியோகித்தல், விடைத்தாள்களை மதிப்பிட விடைக்குறிப்பு தயார் செய்தல், தேர்வு மையம் அமைத்தல் என, எந்த பணியையும், என்.டி.ஏ.,வால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியவில்லை.
என்.டி.ஏ.வை பொறுத்தவரை, டில்லியில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. இதன் தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் செயல்படுகிறார். இவரின் கீழ், தேர்வுக்குழு, நிர்வாகக் குழு செயல்படுகிறது.
தேர்வுக் குழுக்களுக்கு, அந்தந்த தேர்வு சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளே பொறுப்பில் உள்ளனர். உதாரணமாக, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்ட் தேர்வு என்றால், அதற்கு ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழுவினரே பொறுப்பாளர்களாக உள்ளனர்.
தீர்வு தேவை
இப்படி, தனக்கென உள்கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு, தேர்வு நடத்தும் கட்டமைப்பு போன்றவை இல்லாமல், வெறும் ஒருங்கிணைப்பு ஏஜன்சியாக மட்டுமே என்.டி.ஏ., செயல்படுகிறது. இதனால், தேசிய அளவிலான தேர்வுகளில், வினாத்தாள் லீக் ஆவதுடன், முறைகேடுகள் இன்றி தேர்வை நடத்துவது என்பது, என்.டி.ஏ.,வுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
இந்த அடிப்படை பிரச்னைகளை உணர்ந்து, தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மாற்றி அமைத்து கொண்டால் மட்டுமே, எதிர்காலத்தில் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை, சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகள் இல்லாமல் நடத்த முடியும்.
நுழைவு தேர்வுகளை நடத்த, மாநில அளவில் அலுவலகம் அமைப்பதுடன், பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடங்கிய குழுக்களையும் ஏற்படுத்தி, தேர்வுகளை நடத்துவதில், அவர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும்.
அந்தந்த மாநில அரசுகளுக்கும், தேசிய தேர்வு முகமையின் கமிட்டியில் பிரதிநிதித்துவம் அளித்து, அவர்களுக்கும் தேர்வை நடத்தும் பொறுப்பை வழங்க வேண்டும்.
மாறாக, டில்லியில் மட்டும் அலுவலகம் மற்றும் மேல்மட்ட அதிகாரிகளை வைத்து குழு அமைத்து, நுழைவு தேர்வுகளை சீரமைப்பது என்பது, கானல் நீராகவே இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.
- நமது நிருபர் -