தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ உ.பி., மேற்கு பகுதியில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்குமா?

உ.பி., மேற்கு பகுதியில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்குமா?

உ.பி., மேற்கு பகுதியில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்குமா?


ADDED : ஏப் 17, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறுவது, ஆளும் பா.ஜ.,வுக்கு எளிதாக இருக்காது என கூறப்படுகிறது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு பகுதியில் உள்ள சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித் ஆகிய எட்டு லோக்சபா தொகுதி களுக்கு, ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கோபம்


இந்த பகுதியில் இந்த முறை பா.ஜ., வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது, பா.ஜ.,வை ஆதரித்த சில ஹிந்து அமைப்புகள் தற்போது அக்கட்சி மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜபுத்திரர், தாக்குர், பிராமணர், தியாகி போன்ற ஜாதியினர், பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் தாக்குர் சமூகத்தினரின் பங்கு மட்டும், 8 - 10 சதவீதமாக உள்ளது. இவர்கள், யோகி ஆதித்யநாத் அரசில் தங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோல், 7 - 8 சதவீதம் உள்ள ராஜபுத்திர சமூகத்தினரும், தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் மற்ற சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கோபத்தில் உள்ளனர்.

'கிஷான் மஜ்துார் சங்தான்' என்ற அமைப்பின் தலைவரான தாக்குர் பூரன் சிங், ''பா.ஜ., வை வலிமையாக எதிர்க்கக் கூடிய வேட்பாளர்களை எந்த கட்சி நிறுத்தி உள்ளதோ, அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்போம்,'' என, பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மீரட் தொகுதியில் பா.ஜ., சார்பில் ராமாயண தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், பஞ்சாபி சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் சமாஜ்வாதி கட்சி சார்பில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுனிதா வர்மா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி, தியாகி சமூகத்தைச் சேர்ந்த தேவ்விரத் தியாகி என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இதனால், உ.பி.,யின் மேற்கு பகுதியில் உள்ள எட்டு லோக்சபா தொகுதி களில் பா.ஜ., வெற்றி பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்ற பேச்சு எழுந்துள்ளது.

நம்பிக்கை


இதையடுத்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்ய நாத் போன்ற பிரபலங்கள் சூறாவளி பிரசாரத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்பட்ட இடையூறு, கன்வார் போன்ற யாத்திரைகளுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை, ஹிந்துக்கள் மீதான தாக்குதல் போன்ற பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ., தலைவர்கள், எப்படியாவது கரையேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us