திரிணமுல் காங்.,கில் நிலவும் மோதல் பா.ஜ.,வுக்கு கை கொடுக்குமா?: மேற்கு வங்கத்தில் பரபரக்கும் அரசியல் களம்
திரிணமுல் காங்.,கில் நிலவும் மோதல் பா.ஜ.,வுக்கு கை கொடுக்குமா?: மேற்கு வங்கத்தில் பரபரக்கும் அரசியல் களம்
ADDED : டிச 15, 2024 12:29 AM

மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி மோதல் நிலவும் சூழலில், அங்குள்ள தேர்தல் களம், வரும் காலங்களில் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலரும், எம்.பி.,யுமாக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி.
தன் சகோதரரின் மகனான அவரை, தன் அரசியல் வாரிசாக மறைமுகமாக அறிவித்த மம்தா, அவருக்கு முக்கிய பதவிகளை அளித்ததுடன், தேசிய அரசியலிலும் அவரை முன்னிலைப்படுத்தினார்.
எச்சரிக்கை
ஆனால், சமீபகாலமாக இருவருக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அபிஷேக்குக்கு ஆதரவாக சில திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களும், கட்சி நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
ஒருபுறம் ஆட்சி தொடர்பான விஷயங்களிலும், நிர்வாக முடிவுகளிலும் அபிஷேக் மற்றும் அவரின் மனைவி ருஜிராவின் தலையீடும் அதிகரித்து வருகிறது.
நிலக்கரி ஊழல், ஆசிரியர் நியமன ஊழல் போன்ற விவகாரங்களில் சிக்கியுள்ள இருவரும் அவ்வப்போது அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர்.
இதனால், அவருடன் யாரும் நெருக்கமான தொடர்பு வைத்திருக்க வேண்டாம் என்ற மறைமுக எச்சரிக்கையை தன் கட்சி நிர்வாகிகளுக்கு மம்தா விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது நடவடிக்கையும் அவ்வாறே இருப்பதாக மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
அதேசமயம், அபிஷேக்குக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் திரிணமுல் காங்., கட்சியினர், அவருக்கு துணை முதல்வர் போன்ற பதவியை தர வேண்டும் வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த மாதம் 25ல் கோல்கட்டாவின் காலிகாட்டில் உள்ள தன் இல்லத்தில் கட்சி செயற்குழுவை மம்தா கூட்டினார்.
கூட்டத்தின் முடிவில், மூன்று ஒழுங்குமுறை குழுக்கள் உட்பட பல அதிகாரமிக்க குழுக்களை அவர் அமைத்தார். எம்.பி.,க்கள் கல்யாண் பானர்ஜி, மாலா ராய், சட்ட சபை சபாநாயகர் பீமன் பானர்ஜி, அமைச்சர்கள் மனாஸ் பூனியா, ஜாவேத் கான் போன்ற மூத்த தலைவர்களை இந்த குழுக்களுக்கு தலைவராக்கினார்.
அபிஷேக் பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவின் தலைவர்களாக இருந்த நிலையில், அதன் தலைவர்களையும் மாற்ற மம்தா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோதல்
மம்தா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும், அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜியை மட்டுமல்ல, அவரது அரசியல் போட்டியாளர்களையும், துண்டிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
திரிணமுல் காங்கிரசில் நிலவும் இந்த மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பிரசாரத்தை வலுப்படுத்தவும் அக்கட்சி தயாராக உள்ளது. வரும் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து, திரிணமுல் காங்கிரசில் நிலவும் மோதல், ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஆர்.ஜி.கர் மருத்துவமனை டாக்டர் படுகொலை போன்ற விஷயங்களை முன்னெடுக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -