ADDED : ஏப் 07, 2024 04:41 AM

சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், மீண்டும் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இஸ்லாமியர்கள் ஓட்டுகள் அதிகம் உள்ளதால், அவர்களின் ஓட்டுகளை பெற, வி.சி., கட்சியினர், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழகத்தில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான், 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு, வி.சி., கட்சியினரின் ஆதரவு முழுமையாக கிடைக்காததே காரணம் என, அக்கட்சி நிர்வாகிகள் அப்போதே புலம்பினர். இந்நிலையில், சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் போட்டியிடும் நிலையில், இஸ்லாமியர்கள் ஓட்டு முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முஸ்லீம் லீக் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் ஒரு சில இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். கட்சி நிர்வாகிகளும் முழுமையான ஒத்தழைப்பு கொடுக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணி தர்மத்தின்படி, திருமாவளவனுக்கு ஆதரவாக ஓட்டளித்து வருகிறோம் என, ஆதங்கப்பட்டு கொண்டனர். இதை சாதகமாக பயன்படுத்தி, அ.தி.மு.க., கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், இஸ்லாமியர் ஓட்டுகளை தங்கள் பக்கள் திருப்ப, முயற்சித்து வருகின்றனர்.
-நமது நிருபர்-

