கலப்படமற்ற தாய்ப்பால் கணக்கு சீமானுக்கு சாதகமாக அமையுமா?
கலப்படமற்ற தாய்ப்பால் கணக்கு சீமானுக்கு சாதகமாக அமையுமா?
ADDED : ஏப் 15, 2024 01:26 AM

எந்த கட்சிகளிடமும் கூட்டணிக்கு பேரம் பேசாமல், கலப்படமற்ற தாய்ப்பால் போல, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால், ஒன்பது தொகுதிகளில், 20 சதவீத ஓட்டுகளும், மற்ற தொகுதிகளில், 15 சதவீதம் வரையும் பெற்றாக வேண்டும் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கணக்கு போட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறாத புதிய தமிழகம், தற்போது ஒரு தொகுதியை பெற்று, கூட்டணி சார்பில் போட்டியிடுகிறது.
அதேபோல, கடந்த முறை இடம் பெறாத தே.மு.தி.க.,வும், தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., இந்த தேர்தலில் பா.ஜ.,வை விட குறைந்த தொகுதிகளில், அதன் கூட்டணியில் போட்டியிடுகிறது.
இப்படி ஒரு கூட்டணி உருவாகியிருப்பது பொருந்தா கூட்டணியாக தான் தேர்தல் முடிவில் அமையும் என்றும், தன் கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல், கலப்படமற்ற தாய்ப்பால் போல தனித்து போட்டியிடுவதாகவும், சீமான் பேசி வந்தார்.
பொது தொகுதிகளான திண்டுக்கல்லில் தேவேந்திர குல வேளாளரையும், ஆரணி தொகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரையும் வேட்பாளராக, சீமான் நிறுத்தியிருக்கிறார்.
வேட்பாளர் தேர்வில், சிறிய எண்ணிக்கை ஜாதியினருக்கும் இடம் அளித்திருப்பதால், அனைத்து சமுதாயத்தினரின் ஓட்டுகளும் கிடைக்கும் என்று சீமான் கணக்கு போடுகிறார்.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் பணம் கொடுத்து தொண்டர்களை அழைத்து வருவதாக கூறும் சீமான், பணம் தராமல் தானா சேர்ந்த கூட்டத்தில், தாம் பிரசாரம் செய்வதாக சொல்கிறார். அத்துடன், இரண்டாம் இடம் அல்லது மூன்றாவது இடத்தை, தன் கட்சி பிடிக்கும் என்கிறார்.
அதற்காக, வேட்பாளர்களிடம் ஜாதி ரீதியான ஓட்டுகளை பெறுவதற்குரிய வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளில் இரண்டாம் இடத்தை கைப்பற்றும் திட்டத்தில் உள்ள சீமான், 20 சதவீதம் ஓட்டுகளை பெற்றாக வேண்டும் என்ற, அங்குள்ள கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
அதேபோல, மற்ற தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள் மத்தியில் மும்முனை போட்டி உருவாகியுள்ள பட்சத்தில், அங்கு மூன்றாவது இடத்தை பிடிக்க, 15 சதவீதம் ஓட்டுகளையாவது பெற்றாக வேண்டும் என, சீமான் கருதுகிறார்.
தேர்தல் முடிவில், 40 தொகுதிகளில், 12 முதல் 15 சதவீதம் வரை ஓட்டுகளை எடுத்தால் தான், 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மவுசு அதிகரிக்கும் என, சீமான் மட்டுமல்ல, அவரது கட்சியினரும் கருதுகின்றனர்.
- நமது நிருபர் -

