அனுமதியற்ற 'ரிசார்ட்'கள் 'சீல்' வைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அனுமதியற்ற 'ரிசார்ட்'கள் 'சீல்' வைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
UPDATED : ஆக 08, 2024 07:17 AM
ADDED : ஆக 07, 2024 10:43 PM

வால்பாறை : வால்பாறையில், அனுமதியின்றி செயல்படும் ரிசார்ட்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கி செல்ல வசதியாக, 200க்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகளும், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ரிசார்ட்களும் கட்டப்பட்டுள்ளன.
இதில், பெரும்பாலான ரிசார்ட்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளன. எஸ்டேட் பகுதியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக ரிசார்ட்கள் செயல்படுகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறையில் ரிசார்ட்கள் துவங்க வேண்டுமென்றால், வனத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம், நகர் மற்றும் ஊரமைப்பு துறை, நகராட்சி உள்ளிட்ட, 13 துறைகளிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், வால்பாறையில் செயல்படும் ரிசார்ட்கள் எவ்வித அரசு துறை அனுமதி பெறாமல் விதிமுறையை மீறி செயல்படுகின்றன.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், 20க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் செயல்படுகின்றன. அங்கு தங்குவதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக சுற்றுலா பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், ரிசார்ட் நடத்துபவர்கள் அங்கு தங்கும் சுற்றுலா பயணியர் குறித்த விபரங்களை போலீசாருக்கு முறையாக தெரிவிப்பதில்லை. இதேபோல், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குபவர்களின் விபரங்கள் போலீசாருக்கு தெரிவிக்காமலும், பதிவேடுகளை பராமரிக்காமலும் உள்ளனர்.
அனுமதி பெறாமல் செயல்படும் ரிசார்ட்களுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்களின் வலியுறுத்தியுள்ளனர்.