பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஐ.எம்.ஏ., ஆய்வு
பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஐ.எம்.ஏ., ஆய்வு
ADDED : ஆக 31, 2024 12:14 AM

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெண் மருத்துவர்களுக்கு பணியின் போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளை அறிவதற்காக ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ சங்கம் ஆன்லைன் வழியாக ஆய்வு நடத்தியது.
இதில் நாடு முழுதும், 22 மாநிலங்களைச் சேர்ந்த 3,855 மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்கள் தந்த பதிலை தொகுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
இந்த ஆய்வில் அரசு மற்றும் தனியார் துறை மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள், 85 சதவீதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில், 35 சதவீத மருத்துவர்கள் பணியிடத்தில் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், அச்சத்துடன் பணிபுரிவதாகவும் கூறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
இரவுப் பணியின் போது தங்களுக்கு, 'டூட்டி ரூம்' ஒதுக்கப்படுவதில்லை என, 45 சதவீத மருத்துவர்கள் கூறியுள்ளனர். 'டூட்டி ரூம் ஒதுக்கப்பட்டாலும், அதில் கழிப்பறை வசதி இருக்காது, இதற்காக இரவில் வெளியே செல்ல நேரிடுகிறது' என, பலர் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்ற பெண் மருத்துவர் ஒருவர், 'இரவு பணியின் போது கத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரேவை தற்காப்புக்காக எடுத்துச் செல்வேன்' என கூறியுள்ளார்.
பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக்குவது, மருத்துவமனையின் அனைத்து இடங்களிலும் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்வது, மத்திய பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவது போன்றவை அவர்களின் தேவையாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.