ADDED : ஏப் 07, 2024 01:22 AM

உ லகம் தோன்றிய காலம் முதலே, பெண்கள் தான் போருக்குச் சென்று இருக்கின்றனர்; பெண்களே முதல் விவசாயியாக இருந்தனர்; வேட்டையாடினர். காலம் செல்லச் செல்ல, ஆண்கள் பெண்களை அடக்கி, ஒடுக்கினர். வெளியில் தலைகாட்ட உரிமை இல்லை; ஓட்டுரிமை இல்லை. கணவர் இறந்தால், உடன்கட்டை ஏற வேண்டும். ராஜாராம் மோகன் ராய் தான், அந்த நிலையை மாற்றினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட இனப் பெண்களுக்கு, 'முலை வரி' போடப்பட்டது; இதனால் ஒரு பெண், வாளெடுத்து தன் முலையை வெட்டி அறுத்தெறிந்தாள். அந்தப் பெண்ணுக்கு, ஆலப்புழாவில் சிலை கூட உள்ளது.
தற்போது அந்த நிலை மாறி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கூட, பெண்கள் வெற்றிவாகை சூடுகின்றனர். மல்யுத்தம், ஈட்டி எரிதல், கபடி என அதிரடியான விளையாட்டுகளிலும் கோலோச்சுகின்றனர். இளவட்டக்கல்லைக் கூட துாக்குகின்றனர்.
ஜல்லிக்கட்டிலும் பெண்கள் சாதிக்கத் துவங்கினால்?
காளை மாடுகளை வளர்ப்பது, அவற்றை பராமரிப்பது போன்ற காரியங்களை பெண்கள் செய்கின்றனர்; அவர்களுக்கு காளை மாடுகளை பிடிப்பது, அடக்குவது போன்ற வாய்ப்பை ஏற்படுத்தினால் என்ன?
ஜல்லிக்கட்டு தொடர்பான அனுபவமிக்கவர்கள் பலரையும் கலந்து ஆலோசித்தேன். அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முக்கிய முடிவுகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மூன்றுமாத கால முறையான பயிற்சி அளிப்பது; மருத்துவர்களின் முழு உடற்பரிசோதனைக்குப் பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பது; போட்டியாளர்களுக்கு உறுப்பு சேதமோ, உயிர் ஆபத்தோ ஏற்படாத கவச உடை தயாரித்து அளிப்பது...
அவர்களது உறுப்பு மற்றும் உயிருக்குமான காப்பீடு திட்டங்களை செயற்படுத்துவது என்பது தான் அந்த முக்கிய முடிவுகள்.
நமது முயற்சி தொடரவே, இப்போது காவல் துறையில் பணியாற்றும் பெண்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள முன்வந்துள்ளனர். விளையாட்டுத்துறை சார்ந்த பெண்கள், மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள், மாணவியர் உட்பட ஆர்வத்துடன் பல தரப்பினரும் பங்கேற்க முன்வந்துள்ளனர்.
இதுவரை ஜல்லிக்கட்டில் ஆண்களுக்கு கிடைக்கும் பரிசுகளை விட அதிகமான பரிசுகள் 'ஜல்லிக்கட்டு வீராங்கனையருக்கு' கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.
மதுரையில் அரசினால் கட்டப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தில், மகளிர் ஜல்லிக்கட்டு நடைபெறும்!
தைப்பொங்கலை ஒட்டித்தான் தமிழ்நாடு முழுதும் ஜல்லிக்கட்டு நடைபெறும். காளைகள், விளையாட்டு வீரர்கள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிரிந்து கிடப்பர்.
இந்த ஆரவாரம் அடங்கிய பிறகு, மகளிர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரமாண்டமாய் நடக்கும். மார்ச் 8, 2025 - உலக மகளிர் தினத்தை ஒட்டி, மகளிர் ஜல்லிக்கட்டு விளையாட்டை கோலாகலமாக நடத்தலாம் என அனைவராலும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருகோஷ்டியூர் ஆகும். அங்கே அவர் ஜல்லிக்கட்டு காளைகளை வெகு அக்கறையுடன் வளர்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் அடங்காக் காளைகளாக வலம்வந்து பரிசுகளை அள்ளி வருகின்றன அவை!
'மகளிர் ஜல்லிக்கட்டு நிகழ்வில், அந்த காளைகள் கலந்துகொள்ள வேண்டும்' என அவரே அன்பு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், 'இலங்கையில் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் மலையகப் பெண்கள் மூவருக்கு பயிற்சியும், வாய்ப்பும் தாருங்கள்; செலவுகளை நான் பொறுப்பேற்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
ஆதரவு
இதேபோன்று அமெரிக்காவின் மிகப்பெரிய தமிழ்ச்சங்கமான பேட்னா, நிர்வாகிகள் அரசு செல்லையா, கார்டுவேல், ஜெயராஜ் போன்ற பல முக்கிய பிரமுகர்களும் ஆதரவு அளித்து உள்ளனர்.
தவிர, உலக நாடுகளில் இருக்கக்கூடிய ஐந்நுாறுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் ஆதரவு அளிக்கின்றன, ஸ்பான்சர் செய்கின்றன. இந்த பிரமாண்ட நிகழ்வை, என் தலைமையிலான 'மதுரா டிராவல் சர்வீஸ்' ஏற்பாடு செய்கிறது.
'மதுரா டிராவல் சர்வீஸ்' தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் தமிழ் மக்களிடைய சுற்றுலா துறையிலும், பயண துறையிலும் பிரபலமான மிக உயர்ந்த ஸ்தாபனம்.
இந்த ஸ்தாபனம் டிக்கெட் விற்பனை, சுற்றுலா அழைத்துச் செல்வது ஆகியவற்றை மட்டுமே செய்து வந்தது, அதையும் தாண்டி தமிழ் கூறும் நல்லுலகத்தில் பல முத்திரைகளை பதித்து உள்ளது.
'இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய நிறுவனம்' என்று 'லிம்கா' சாதனை புத்தகம் பதிவு செய்துள்ளது.
எதிர்காலத்தில் மகளிர் ஜல்லிக்கட்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும். நம் தமிழ் மகளிரின் வீரம், வாகை சூடும்!

