போதையில் தள்ளாடும் தமிழகம் சாலைகளில் உருளும் இளைஞர்கள்
போதையில் தள்ளாடும் தமிழகம் சாலைகளில் உருளும் இளைஞர்கள்
UPDATED : ஏப் 25, 2024 02:21 AM
ADDED : ஏப் 25, 2024 02:13 AM

தமிழகத்தில் தாராளமாக கிடைக்கும் போதை மாத்திரை, போதை ஊசி, ெஹராயின், மெத்தாம்பேட்டமைன், கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்தி சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் சீரழிந்து சாலைகளில் உருளும் காட்சிகள் சகஜமாகி வருகின்றன.
தி.மு.க.,வில் அயலக பிரிவு நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவர் அரசியல் மற்றும் திரை உலக தொடர்புகளை பயன்படுத்தி சர்வதேச போதை பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வந்த கதைகள் ஒவ்வொன்றாக அம்பலமாகும் நிலையில், போதை சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் தமிழ் சமுதாயம் சீரழிந்து வருவது குறித்து சமூக ஆய்வாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு நடத்தும் டாஸ்மாக் வாயிலாக தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கின்றனர் என்பதே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாக இருந்தது.
மதுவுக்கு சவால் விடும் விதமாக குட்கா, மாவா உள்ளிட்ட மலிவு விலை போதை பொருட்கள் தமிழகத்தில் ஊடுருவியபோது அரசு அதிகாரிகள் உயர் போலீஸ் அதிகாரிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் கணிசமான பங்கு கிடைத்ததால், அந்த போதை பொருட்களின் வியாபாரத்தை முடக்க முழுமையான முயற்சிகள் எடுக்கவில்லை.
அந்த மெத்தன போக்கும் சுயலாப சிந்தனையும் இன்று தமிழகத்தை போதைநாடாக புரட்டிப் போடும் அளவுக்கு தீயசக்திகளை உரமிட்டு வளர்த்துள்ளன. மலிவு விலை போதை பொருட்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, விலை உயர்ந்த கொகைன், மெத்தாம்பேட்டமைன், கஞ்சா எண்ணெய் என ஆடம்பர போதை வஸ்துகள் விற்பனை கொடி பறக்கிறது.
இதுவரை மேலை நாடுகளில் மட்டுமே பார்த்த அலங்கோலங்கள் தமிழக வீதிகளிலும் அரங்கேறுகின்றன. மேல்தட்டு, மத்திய வர்க்கம், ஏழை என்ற சமூக பாகுபாடு இல்லாமல் போதை தலைக்கேறிய இளம் தலைமுறையினர் சாலை ஓரங்களில் அரை மயக்கத்தில் கொக்கி போல் வளைந்து நிற்பது, சுவரில் சாய்ந்து கிடப்பது, தரையில் உருண்டு கிடப்பது போன்ற காட்சிகளை பல நகரங்களில் காண முடிகிறது.
*சென்னை கஸ்துாரிபா நகரில் நேற்று முன் தினம் இரு வாலிபர்கள் சாலையோரம் சரிந்து கிடந்தனர். பகுதிவாசிகள் 100க்கு போன் செய்ததால், ரோந்து போலீஸ் ரவிச்சந்திரன் வந்து வாலிபர்கள் மீது தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தார்.
'சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம். வேலை தேடி சென்னை வந்தோம். டாஸ்மாக்கில் மது குடித்து மட்டையாகி விட்டோம்' என கூறியுள்ளனர். ஆனால் அவர்களிடம் மது நெடி இல்லை. ஆஸ்பத்திரியில் சோதனை செய்தால் உண்மை தெரியும் என நினைத்த போலீசார், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தபோது போதை ஆசாமிகளை காணவில்லை. கூட்டம் சேர்ந்ததும் நழுவி விட்டனர். அல்லது யாரோ அழைத்து சென்றிருக்க வேண்டும். “என்ன செய்வது? தினமும் ஒரு சம்பவமாவது இப்படி நடக்கிறது” என்கின்றனர் போலீசார்.
ஆஸ்பத்திரிக்கோ போலீஸ் நிலையத்துக்கோ அழைத்து சென்று முதலுதவி செய்த பிறகு, போதை ஆசாமிகளை விடுவிக்க “மேலிருந்து” போன் வந்த சம்பவங்களையும் போலீசார் விரக்தியுடன் விவரிக்கின்றனர்.
* நேற்று முன் தினம் இரவு, புழல் கதிர்வேடு பகுதியில் பைக்கில் வேகமாக சென்ற இருவர், பட்டா கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்க விட்டு மக்களை அசசுறுத்தினர். காற்றுக்காக வீட்டு வாசலில் நின்றிருந்த இருவரை கத்தியால் கத்தியால் தாக்கினர். திருவள்ளுவர் தெருவில் கடைகளை அடித்து நொறுக்கினர். வீடுகளின் அருகே நிறுத்தி இருந்த பைக், ஸ்கூட்டர், ஆட்டோக்களை உடைத்து சேதப்படுத்தினர். அவர்கள் போதையில் இருந்ததாக பார்த்தவர்கள் கூறினர். மது போதை அல்ல.
* பல்லாவரத்தில் மூடப்பட்ட 'டாஸ்மாக்' கடை முன்பு அதிகாலை 3:00 மணிக்கு மூன்று பேர் நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் விசாரித்தபோது தெனாவட்டாக பதில் சொல்லி தகராறு செய்தனர். ரோந்து வாகன கண்ணாடி உடைந்தது. அஸ்தினாபுரத்தை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
* கன்னிகாபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன், கோவில் நிர்வாகி ஆகியோரை போதையில் கத்தியால் குத்திய இரு வாலிபர்களை கே.கே.நகர் போலீசார் பிடித்தனர்.
கஞ்சாவுடன் சிக்கிய பெண் ஐ.டி., ஊழியர்
* சூளைமேடு சக்திவேல் நகரில் வசிப்பவர் ஷர்மிளா, 25. ஓ.எம்.ஆர்., சாலையில் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவரது வீட்டில் 1,300 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஷர்மிளாவும் கைது. நண்பர் சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
* கண்ணகி நகரில் ரோந்து சென்ற ஏட்டு புஷ்பராஜ், காவலர் சிலம்பரசன் ஆகியோரை கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கடுமையாக தாக்கினர். இந்த பகுதியில் நிறைய பேர் கைதான பிறகும் கஞ்சா வியாபாரம் நிற்கவே இல்லை.
* இந்த வார சம்பவங்கள் என்று பட்டியல் போட்டால், கும்பகோணம் அருகே இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசு பஸ் ஓட்டுனரை கொடூரமாக தாக்கினர். சித்திரை திருவிழாவுக்கு வந்தவர்களை, மதுரை ஒத்தக்கடையில் கஞ்சா போதை வாலிபர்கள் தாக்கினர். தேனியில் கஞ்சா போதையில் மனைவி மற்றும் மாமனாரை வாலிபர் தாக்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில், கூடைப்பந்து விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா போதையில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு கஞ்சா மற்றும் போதை வஸ்துகளால் ஒரே வாரத்தில் நடந்த பல சம்பவங்களில் சிக்கியவர்கள் அனைவரும் 25 வயதை தாண்டாத இளைஞர்கள்.

