கேரளாவுக்கு திருப்பப்படும் 10 டி.எம்.சி., பி.ஏ.பி., நீர்
கேரளாவுக்கு திருப்பப்படும் 10 டி.எம்.சி., பி.ஏ.பி., நீர்
UPDATED : அக் 26, 2024 06:40 AM
ADDED : அக் 25, 2024 10:35 PM

திருப்பூர்; பி.ஏ.பி., வெள்ளக் கோவில் (காங்கயம் - வெள்ளகோவில்) கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது; கடந்த மாதம், காங்கயத்தில் பகிர்மான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சபை தலைவர்களுக்கு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில்( பி.ஏ.பி.,) முன்னெடுக்கப்படும் புனரமைப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், சிதிலமடைந்துள்ள அனைத்து கான்கிரீட் வாய்க்கால்களும் புதுப்பிக்கப்படும். 25 ஏக்கர் வரை விடுபட்டுள்ள கான்கிரீட் கால்வாய்களும் புதுப்பிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், நுண்ணீர் பாசன முறையை, அரசு ஊக்குவிக்கிறது.
திருமூர்த்தி மற்றும் ஆழியார் பரம்பிக்குளம் விவசாயிகள், குழாய் வழியாக அவரவர் பகுதிக்கு நீர் வினியோகம் செய்யவும், அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் நுண்ணீர் பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பி.ஏ.பி., கண்காணிப்பு கூட்டுக்குழுவில், விவசாயிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு செய்வதன் வாயிலாக, தண்ணீர் எங்கு திருடப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட முடியும்.
தவறான நீர் மேலாண்மையால், பி.ஏ.பி., நீர் பிடிப்பு தொகுப்பு அணைகளில் இருந்து, பாசன பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய, 10 டி.எம்.சி., தண்ணீர், கேரளாவுக்கு திருப்பப்படுகிறது.
மழைக்காலங்களில், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்வது என்பது, அதிகாரிகளுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது. தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட பி.ஏ.பி., நீர்பாசன திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, வேலுசாமி கூறினார்.