கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம்
கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம்
UPDATED : நவ 19, 2024 04:45 AM
ADDED : நவ 18, 2024 09:43 PM

கோவை; கருமத்தம்பட்டி அருகே பாதுகாப்பு அம்சங்களுடன், அதிவேகம், தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட சோதனைகளுக்கு ஏற்ற சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை போத்தனுார் அடுத்த செட்டிபாளையம் தேசிய அளவிலான கார் பந்தயம் நடத்தும் வகையில் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பார்முலா கார் வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகளில் கோவை இளைஞர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும் கார் பந்தய வீரர்கள் இங்கு நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், கருமத்தம்பட்டி, கே.பி.ஆர்., மில்ஸ் அருகே, 111 ஏக்கரில் சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
கார் பந்தயத்துக்கென்று, 3.8 கி.மீ., துாரத்துக்கு பிரதான சாலையும், 'கோ கார்ட்' எனப்படும் குழந்தைகள், குடும்பத்தினருடன் குதுாகலிக்க, 1.1 கி.மீ., துாரத்துக்கு தனி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் அகலம், 12 முதல், 15 மீட்டர் வரை உள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் மைதானத்தை வடிவமைத்துள்ளது. தானியங்கி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட உற்பத்தியில் நாட்டின் இதயமாக கோவை திகழ்கிறது. இந்நிலையில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இளம் தலைமுறையினர் பாதுகாப்பான முறையில் இங்கு பயிற்சி பெற முடியும்.
டீசல், பெட்ரோல் வாகனங்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் வாகனங்களையும் இயக்கி சோதனை செய்துவருகின்றனர். கோவையை சேர்ந்த பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோர் கார்களை அதிவேகமாக இயக்கி இங்கு சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, 'டிராக் ஹெட்' விசால் அரவிந்த் கூறியதாவது:
பார்முலா-2, பார்முலா-4 என, சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளை இங்கு நடத்த முடியும். இதில், பாதுகாப்பு அம்சங்களுடன், 'பேன்கிடு கார்னர்' எனப்படும் சவால்கள் மிகுந்த வளைவுகள், வாகனங்களுக்கான தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
ரூ.50 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் மதியம், 12:00 முதல் இரவு, 9:00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை இதில் பயிற்சி பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.