மோடி விழாவில் 12,000 நாற்காலிகள்; தி.மு.க., - பா.ஜ., சரிபாதியாக பிரிப்பு
மோடி விழாவில் 12,000 நாற்காலிகள்; தி.மு.க., - பா.ஜ., சரிபாதியாக பிரிப்பு
ADDED : ஜூலை 26, 2025 03:17 AM

துாத்துக்குடியில், உலக தரத்தில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை, பிரதமர் மோடி இன்று இரவு திறந்துவைக்கிறார்.
பின், துாத்துக்குடி துறைமுகம் ஆறுவழிச்சாலை திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.
இதற்காக இன்று இரவு 8:00 மணிக்கு மாலத்தீவிலிருந்து, பிரதமர் மோடி தனி விமானத்தில், துாத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தமிழக பா.ஜ., சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வி ழாவில் பிரதமர் மோடியுடன், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்பார் என திட்டமிட்டிருந்ததால், மேடையின் முன், 12,000 நாற்காலிகள் போ ட முடிவு செய்யப்பட்டது.
தற்போது, முதல்வர் வர இயலாது என்பதால், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பா.ஜ., சார்பில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் வானதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேடை முன்பு போடப்பட்டுள்ள, 12,000 நாற்காலிகளில், தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் அமர, 6,000 நாற்காலிகள்; பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் அமர, 6,000 நாற்காலிகள் என சம எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி பேசுவதற்கு முன், தி.மு.க.,வினர் எழுந்து செல்லாமல் இருக்க, அக்கட்சி தரப்பில் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -