ADDED : பிப் 19, 2024 11:15 PM

''மாநிலம் முழுதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை துவங்க வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:உறுப்பினர் சேர்க்கை முகாம்களை, மாநிலம் முழுதும் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்காக, நவீன வசதிகளுடன் மொபைல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும், புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள், மகளிர் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். படப்பிடிப்பு முடிந்ததும், நிர்வாகிகளையும், மக்களையும் விஜய் சந்திப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.

