மா.செ., பதவியில் 20 சதவீத ஒதுக்கீடு; திமுக தலித் நிர்வாகிகள் கோரிக்கை
மா.செ., பதவியில் 20 சதவீத ஒதுக்கீடு; திமுக தலித் நிர்வாகிகள் கோரிக்கை
ADDED : செப் 04, 2026 05:27 AM

- நமது நிருபர் -
தி.மு.க., மாவட்ட செயலர் பதவியில், தலித்துகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்குமாறு, கட்சியின் தலித் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க.,வில், அதிகாரமிக்க மாவட்ட செயலர் பதவியில், தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. தற்போது உள்ள 77 தி.மு.க., மாவட்ட செயலர்களில், மூவர் மட்டுமே தலித்துகள்.
தேர்தல் தோல்விக்கு பின், மாவட்ட செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக, தி.மு.க., உயர்த்தியுள்ளது. அதில், தலித் சமுதாயத்தினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்குமாறு, கட்சியின் மறுசீரமைப்பு குழுவிடம், அச்சமுதாயத்தை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: சமூக நீதிக்கு முக்கியத்துவம் தரும் கட்சியான தி.மு.க.,வில் தலித் சமுதாயத்தினருக்கான பிரதிநிதித்துவம் மிகக்குறைவாகவே உள்ளது. அதனால் தான், தலித் மக்கள் அதிகமாக வாழும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெறவில்லை.
கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியால் தான், 11 தொகுதிகளில் வென்றது. அதே நேரத்தில், த.வெ.க.,வில், தலித் சமுதாயத்தினர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
தற்போது, கட்சியின் மாவட்ட செயலர் பதவிகளுக்கு, உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பணம் படைத்தவர்களும், ஜாதி பலம் மிக்கவர்களும் தான், வெற்றிபெறும் நிலை ஏற்படும். எனவே, தலித் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில், 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்குமாறு கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
