22 சதவீதம் கமிஷன்; மாமூல் வேட்டை.. லஞ்சம் 'லைவ்'
22 சதவீதம் கமிஷன்; மாமூல் வேட்டை.. லஞ்சம் 'லைவ்'
ADDED : ஜூன் 27, 2026 07:40 AM

'பார்ட்டி பண்ட்' மற்றும் மாமூல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க களமிறங்கியிருப்பதாக பறைசாற்றுகிறது, தமிழகத்தின் புதிய அரசு; இதற்கான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளது. பின்னலாடை, விசைத்தறி, கறிக்கோழி உள்ளிட்ட தொழில்களிலும், விவசாயத்திலும் கோலோச்சும், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளிலும் லஞ்சப் புழக்கம் எவ்விதத் தடையுமின்றி விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கோட்டையில் தலைமை மாறினாலும், உள்ளூரில் மாறாத இந்த மாமூல் முறைகேடுகளையும், அதனால் அன்றாடம் நசுக்கப்படும் மக்களின் குமுறல்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, நம் நிருபர் படை!
மாமூல் வேட்டை; தொழில்துறை தவிப்பு
மத்திய, மாநில அரசுகளுக்கு இணையாக, திருப்பூரின் பொருளாதாரத்தை தொழிலாளர்களின் வியர்வையோடு தாங்கிப் பிடிப்பவர்கள் இங்கிருக்கும் சிறு, குறு மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள். இவர்களைப் 'பொன் முட்டையிடும் வாத்து'களாக பார்க்கும் சில அரசுத் துறைகள், ஆய்வு என்ற பெயரில் பகிரங்கமாக மாமூல் வேட்டையாடி வருகின்றனர். சட்ட விதிகளை 100 சதவீதம் சரியாகப் பின்பற்றித் தொழில் நடத்தினாலும் கூட, அரசு அதிகாரிகளின் கல்லா கட்ட வேண்டிய கட்டாயம் திருப்பூரில் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது. ஆட்சி மாறினாலும் இந்த மாமூல் வேட்டைக்கு விடிவு பிறக்காதா என்ற பலத்த ஏக்கத்தில் தொழில்துறையினர் காத்துள்ளனர்.
மாசு கட்டுப்பாடு வாரியம்
சாய ஆலைகள், பிரின்டிங் மற்றும் சலவை ஆலைகளைக் கண்காணிக்கும் இந்த வாரியத்திற்கு, இயந்திரப் பயன்பாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க தலா 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயும், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கட்டாயக் கப்பம் கட்ட வேண்டியுள்ளது. 'ஸ்லட்ஜ்' மற்றும் உப்பு கழிவு பரிசோதனை என்ற பெயரில் ஆலைகளுக்கு வரும் அதிகாரிகள், முறையான சான்றிதழ்கள் இருந்தும் ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டி மிரட்டுவதால், செலவு இன்னும் பல மடங்கு எகிறுகிறது. லஞ்சம் தராவிட்டால் ஆலையை மூட உத்தரவிடப்படும் என்ற அச்சுறுத்தலே இங்கு பிரதான ஆயுதம்.
தொழிலக பாதுகாப்புத் துறை
வெளிநாட்டு வர்த்தகர்களின் ஆர்டர்களைப் பெற்றுத் தொழிலைத் தொடர்ந்து நடத்த இவர்களின் சான்றிதழ் மிக அவசியம். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வுக்கு வரும்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் காரணம் காட்டி மிரட்டுகின்றனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் வேறு வழியின்றித் தங்களின் அவசர ஆர்டர்களை முடிக்க வேண்டி, அதிகாரிகளுக்கு 5,000 முதல் 20,000 ரூபாய் வரை கவரில் வைத்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.
விசாரணை மிரட்டல்
நாங்கள் லஞ்சம் கொடுப்பது தவற்றை மறைக்க அல்ல; திடீரென 'விசாரணை' எனத் தொழிலை முடக்கினால், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு குறித்த நேரத்தில் ஆர்டர்களை அனுப்ப முடியாது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் என்பதால்தான் எனத் தொழிலதிபர் ஒருவர் கண்ணீருடன் குமுறுகிறார். தொழிலை முடக்கிவிடுவோம் என்ற அதிகாரிகளின் மிரட்டலே இந்த மாமூல் சாம்ராஜ்யத்தை முட்டுக் கொடுத்துத் தாங்குகிறது.
ஆடம்பரச் செலவுகள்
இதுபோக மின்வாரியம், உணவுப் பாதுகாப்புத் துறை எனப் படையெடுக்கும் அதிகாரிகள் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் மாவட்ட உயரதிகாரிகளின் சென்னைச் சொந்தப் பயணங்களுக்கான விமான டிக்கெட்கள், அவர்களின் சொகுசு கார் - எரிபொருள் செலவுகள் மற்றும் உறவினர்களின் ஆடம்பரச் செலவுகள் வரை திருப்பூரின் முன்னணி தொழில் அமைப்புகளின் தலையில்தான் கட்டப்படுகின்றன என்பது வெட்கக்கேடான உண்மை.
சாமானியரைப் பிழியும் பாக்கெட் கலாசாரம்
மறுபுறம், ஏழை சாமானிய மக்களும் தங்கள் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், சான்றிதழ்களுக்காகவும் அரசு அலுவலகங்களை அணுகும்போது லஞ்சப் பிடியில் சிக்கிச் சீரழிந்து தவிக்கின்றனர்.
வருவாய்த்துறை கொள்ளை
வாரிசு சான்று, இறப்பு சான்று, பட்டா மாறுதல் என, வருவாய்த்துறையில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலைகளும் நடப்பதில்லை. ஒருவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், இறப்பு சான்று வாங்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கிட்டு அதிகாரிகள் பகிரங்கமாகவே வசூலிக்கின்றனர்; உள்ளூர் அரசியல் தலையீடு இருந்தால் மட்டுமே அந்தத் தொகை 5 ஆயிரம் ரூபாயாகக் குறைகிறது.
சான்றிதழ்களுக்கு கப்பம்
ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தேவைப்படும் வாரிசு சான்றுக்கு, ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கணக்கிட்டுக் கப்பம் கட்டவேண்டியுள்ளது. இது தவிர, நிலம் தொடர்பான பட்டா மாறுதலுக்குச் சாமானியர்களிடம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் புரோக்கர்கள் மூலமாகக் கறாராக வசூலித்து வருகின்றனர்.
கனவு இல்லத் திட்டம்
ஏழைகளுக்கான 'கனவு இல்லம்' திட்டத்தில், கான்கிரீட் வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் 3.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் அடிப்படையிலும், புகைப்பட ஆதாரங்களின் படியும் நான்கு கட்டங்களாகப் பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகையை விடுவிக்க ஊரக வளர்ச்சித்துறையின் பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு, ஒவ்வொரு கட்டத்திற்கும் 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அழுது தீர்க்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
வியாபாரிகள் குமுறல்
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் சாலையோர தற்காலிக கடைகள் அமைக்கும்போது, உள்ளூர் நகராட்சி, காவல்துறை, சுகாதாரத் துறை எனப் பல்வேறு பிரிவுகளுக்குக் குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டிய நிலை இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அனுமதி நடைமுறைகளில் எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இல்லாததால், எளிய வியாபாரிகள் தங்களின் தினசரி வருமானத்தை மாமூலாகக் கொடுக்க வேண்டியுள்ளது.
22 சதவீதம் கமிஷன்; பணிகளோ பாழ்
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் 'டெண்டர்'களில் கமிஷன் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டு வருவதாக உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் சிலரே ரகசியமாகத் தெரிவிக்கின்றனர்.
எல்லையற்ற கொள்ளை
கடந்த காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் டெண்டர் தொகையில் தோராயமாக 7.5 சதவீதம் வரை கமிஷன் வாங்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், சமீபத்திய காலகட்டங்களில் இந்த கமிஷன் தொகை அதிரடியாக 15 முதல் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாகத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கூட, இந்த எல்லையற்ற கமிஷன் கொள்ளையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
50 சதவீதம் தான் மிச்சம்
ஒரு குறிப்பிட்ட பணிக்கான மதிப்பீட்டில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்த வேண்டும். இது தவிர வைப்புத்தொகை, வருமான வரி மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் ஆகியவற்றிற்காக மேலும் 10 சதவீதம் வரை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லஞ்சம், கமிஷன், அரசு வரிகள் மற்றும் பிடித்தங்கள் அனைத்தும் போக, டெண்டர் தொகையில் வெறும் 50 முதல் 60 சதவீத நிதியில் மட்டும் தான் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. இதனால் சாலைகள் மற்றும் அரசு கட்டடங்களின் தரம் முற்றிலும் பாழாகிறது.
எழுதப்படாத ஒப்பந்தம்
இவை தவிர, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடக்கும்போது, அதற்கான லட்சக்கணக்கான செலவுகளை ஈடுகட்ட ஒப்பந்ததாரர்களிடம் தனியாக அரசியல் கட்சிகள் எழுதப்படாத 'ஒப்பந்தம்' போட்டு வசூலிக்கின்றன. மேலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அளவில் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் எனப் பலரையும் ஒப்பந்ததாரர்கள் தனியாகக் 'கவனிக்க' வேண்டியுள்ளது.
போலி செய்தியாளர்கள்
அரசியல் கட்சியினருக்கு இணையாக, தற்போது செய்தியாளர்கள் என்ற பெயரில் புற்றீசல் போலப் பலரும் கிளம்பி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 'டாஸ்மாக்' கடைகள், அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களை மிரட்டி, கட்டாய வசூல் மற்றும் மாமூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அரசியல் கட்சியினர், அதிகாரிகள் முதல் போலி செய்தியாளர்கள் வரை கையூட்டாக பெறும் பணம் அனைத்தும், மக்களின் வரிப்பணத்தில் டெண்டர் விடப்படும் வளர்ச்சிப் பணிகளில் இருந்துதான் சுரண்டப்படுகிறது.
காவல்துறை பேரம்
காவல்துறையில் டி.எஸ்.பி., உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் அரசியல் மற்றும் பணச் செல்வாக்கைப் பயன்படுத்தி, விரும்பிய பணப்புழக்கம் உள்ள இடங்களில் நங்கூரமாக அமர்ந்து கொண்டு கல்லா கட்டும் போக்கு இன்னும் தொடர்கிறது. சிபாரிசு, பணம் போன்றவற்றைப் பயன்படுத்தி 'லகரம்' பேரம் பேசி லாபகரமான ஸ்டேஷன்களை, பகுதிகளை ஒதுக்கும் முறைகேடுகள் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. கறைபடிந்த கைகள் தங்களுக்கான விருப்பப்பட்ட இடங்களைத் தொடர்ந்து தக்கவைத்து வருகின்றன.
'ஷாக்' அடிக்க வைக்கும் மின் திறன் நடைமுறை
புதிய தொழில் மின் இணைப்பு வாங்குவதும், கூடுதல் மின் திறன் பெறுவதும் பெரும் குதிரைக்கொம்பாக உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், 'டிரான்ஸ்பார்மர் பற்றாக்குறை', 'கம்பிகள் இழுக்க வேண்டும்' எனக் காரணங்களைக் கூறி மாதக்கணக்கில் கோப்புகளை முடக்குகின்றனர். அதிகாரிகள் கேட்கும் தொகையைத் தரகர்கள் மூலமாகக் கவனித்தால் மட்டுமே அடுத்த வாரமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுதவிர, ஆலைகளில் மாதாந்திர மின் நுகர்வு அளவை கணக்கிடும் போது, தொகையைக் குறைத்துக் காட்டுவதற்காகக் கீழ்மட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை மாமூல் வாங்குவது எழுதப்படாத விதியாக உள்ளது.
வட்டாரப் போக்குவரத்து
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்(ஆர்.டி.ஓ.) ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் எப்.சி. சான்றிதழ் போன்றவற்றுக்குப் புரோக்கர்கள் மூலமாகப் பகிரங்கமாகவே பணம் வசூலிக்கப்படுகிறது. விதிகளைத் துல்லியமாகப் பின்பற்றிச் சாமானியர்கள் நேரடியாகச் சென்றால், 'டிரைவிங் டெஸ்ட்டில்' ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். ஆனால், மோட்டார் வாகன ஆய்வாளர்களை ஏஜென்ட்கள் மூலம் கவனித்துவிட்டால், வண்டியே வராமல் கூட எப்.சி. சான்றிதழ் கைக்கு வந்துவிடுகிறது. திருப்பூரில் ஓடும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்களிடம் இருந்து மாதந்தோறும் லாரிகள் மற்றும் வேன் சங்கங்கள் மூலம் கட்டாய மாமூல் வசூலிக்கப்படுகிறது.
கட்டாயக் கப்பம்
திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிவதால், இந்தத் துறை அதிகாரிகளின் மாமூல் வேட்டைக்கு எல்லையே இல்லாமல் உள்ளது. ஆலைகளில் தொழிலாளர் சட்டங்கள், பாதுகாப்பு விதிமுறைகள், இ.எஸ்.ஐ மற்றும் பி.எப். போன்ற கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள், குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதாக மிரட்டுகின்றனர். இந்த மிரட்டலுக்குப் பயந்து, பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஜவுளிக் கடைகள் ஆண்டுதோறும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் இந்தத் துறை அதிகாரிகளுக்குக் கட்டாயக் 'கப்பம்' கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பதிவுத்துறை கொள்ளை
திருப்பூர் மாவட்டத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் என்பது எழுதப்படாத விதியாகவே மாறியுள்ளது. புதிய வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள், தங்களின் சொந்த சொத்தைப் பதிவு செய்ய அரசு நிர்ணயித்த முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தைத் தவிர, அதிகாரிகளுக்குத் தனியாகக் 'கப்பம்' கட்ட வேண்டியுள்ளது. 'ப்ளாட்' அங்கீகாரம், நிலத்தின் வகைப்பாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஆவண எழுத்தாளர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலமாகப் பகிரங்கமாகவே பேரம் பேசப்படுகிறது. லஞ்சம் தராவிட்டால், ஆவணங்களில் ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டி வாரக்கணக்கில் அலையவிடுவதும், சொத்தின் வழிகாட்டி மதிப்பை விடக் கூடுதலாகக் காட்டி அபராதம் விதிப்போம் என மிரட்டுவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது.
கட்டட அனுமதி
திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் புதிய வீடு அல்லது வணிக வளாகம் கட்டத் திட்ட அனுமதி பெறுவது சாமானியர்களுக்கு இமாலயப் பணியாக உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டாலும், கள ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் சதுர அடி கணக்கில் லஞ்சப் பணத்தை நிர்ணயம் செய்கின்றனர். சிறிய வீடுகளுக்குக் கூட ஆயிரக்கணக்கிலும், வணிக வளாகங்களுக்கு லட்சக்கணக்கிலும் கைமாறினால் மட்டுமே கோப்புகள் நகர்கின்றன. விதிகளை 100 சதவீதம் பின்பற்றி வரைபடம் தயாரித்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து இழுத்தடிப்பதால், வேறு வழியின்றிச் சாமானியர்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை லஞ்சமாகக் கொட்ட வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.
டாஸ்மாக் மாமூல்
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மாமூல் வேட்டையின் உச்சகட்ட கூடாரங்களாகத் திகழ்கின்றன. அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலிப்பது, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல் விஐபிக்களின் மாமூலுக்காகவே என்பது ஊரறிந்த ரகசியம். சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் பார்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க, காவல்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகளுக்கு மாதந்தோறும் 'லகரங்களில்' மாமூல் தடையின்றிச் சென்றடைகிறது. இந்தச் சங்கிலித் தொடர் லஞ்சத்தால், சாமானியக் கூலித் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் திருப்பூர் நகரில் அதிகரித்து வருகிறது.
நிரந்தர நீக்கமே தீர்வு
லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் சிக்கி, லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளை பாரபட்சமின்றி, எந்தக் கேள்விகளுக்கும் இடமில்லாமல் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் ஒழிக்க இதுவே முதல் படியாக இருக்க முடியும். தற்போது லஞ்ச வழக்குகளில் கைது செய்யப்படும் செய்திகளோடு அனைத்தும் நின்றுவிடுகிறது. அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்ற விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. ஒரு லஞ்ச வழக்கில் அதிகாரி பிடிபட்டால், அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் அந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்காக தனியாக சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
துறை சார்ந்த விசாரணைகள் வெறும் கண் துடைப்பாகவே மாறிவிட்டது. கீழ்மட்ட அதிகாரிகள் வசூல் செய்து தரும் பணத்தை உயர் அதிகாரிகள் பெற்றுக் கொள்வதால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்குகிறார்கள். இந்த முறையை மாற்றி, லஞ்ச ஊழல் புகார்களை விசாரிக்க துறை சாராத, முற்றிலும் சுதந்திரமான தனி விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து கமிஷன் வழங்குவது, முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும்.
சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர், ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு குழு.
மக்கள் அதிகாரம் அவசியம்
ஒவ்வொரு துறையின் அடிமட்ட நிலையில் இருந்து லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்ட வேண்டும். மின்வாரிய துறை அமைச்சர் வெளியிட்டது போன்ற வெள்ளை அறிக்கையை, ஒவ்வொரு துறை வாரியாக வெளியிட வேண்டும். அரசின் திட்டங்களும் அதிகாரங்களும் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகள் வலுபெற வேண்டும். குறிப்பாக, கேரளா போன்ற மாநிலங்களில் கிராம சபைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் கிராம சபை என்றால் என்னவென்றே தெரியாத சூழல் நிலவுகிறது. கிராம சபைகளைச் சரியாக நடத்துவதே இல்லை.ஏதோ ஒரு செயல் திட்டத்தை அவர்களே தயார் செய்து கொண்டு வந்து, அதற்கு பஞ்சாயத்தில் தீர்மானம் போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். கிராமப்புற மக்களிடமும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களிடமும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் கல்வியையும் வழங்க வேண்டும். மக்களை முழுமையாக அதிகாரப்படுத்தினால் மட்டுமே, அவர்களால் இந்த ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
மனோகரன், அறப்போர் இயக்கம்.
