கோவையில் 2.22 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவு; எஸ்.ஐ.ஆர்., பணியால் சதவீதம் அதிகரித்தது
கோவையில் 2.22 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பதிவு; எஸ்.ஐ.ஆர்., பணியால் சதவீதம் அதிகரித்தது
UPDATED : ஏப் 25, 2026 07:56 AM
ADDED : ஏப் 25, 2026 07:53 AM

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில், 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன் காரணமாகவே, இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2021ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது (2026) 2.22 லட்சம் ஓட்டுகளே கூடுதலாக பதிவாகியுள்ளன. கோவை மாவட்டத்தில் முந்தைய வாக்காளர் பட்டியலில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.,) செய்தபோது இரட்டை பதிவு, முகவரி மாறிச் சென்றவர்கள், இறந்த வாக்காளர்கள் என, 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேர் நீக்கப்பட்டனர். இதன்பின் வெளியிட்ட வரைவு பட்டியலில், 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் இருந்தனர். தகுதியுள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதால், மீண்டும் பெயர் சேர்க்க வாய்ப்பு தரப்பட்டது.
தேர்தலில் போட்டியிட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில், 23 லட்சத்து 25 ஆயிரத்து 011 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர்.இது, 84.72சதவீதம். 2021 தேர்தலில் 21 லட்சத்து 2 ஆயிரத்து 540 ஓட்டுகள் செல்லத்தக்கவையாக பதிவாகி இருந்தன. அதனுடன் தற்போது பதிவான ஓட்டுகளை ஒப்பிடுகையில், 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 ஓட்டுகளே அதிகமாக பதிவாகியுள்ளன.
அதேநேரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் வீட்டுக்குச் சென்று தபால் ஓட்டு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் ஓட்டு பதிவு செய்தனர். இவர்களது ஓட்டு இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. வரும் 27ம் தேதி திருச்சியில் தபால் ஓட்டுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
அச்சமயம், வெளிமாவட்டங்களில் வசிக்கும் அரசு ஊழியர்களில் கோவையை சேர்ந்த வாக்காளர்கள் அளித்த தபால் ஓட்டுகள் பெறப்பட்டு, கோவைக்குஎடுத்து வரப்படும். அதனால், ஒவ்வொரு சட்டபை தொகுதியிலும் பதிவான ஓட்டுகளில் சிறிய அளவில் மாறுதல் ஏற்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
