267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: 10 பேருக்கு சாவகாசமான, 'நோட்டீஸ்'
267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: 10 பேருக்கு சாவகாசமான, 'நோட்டீஸ்'
ADDED : ஜன 21, 2025 07:13 AM

சென்னை விமான நிலையத்தில் நடந்த, 167 கோடி ரூபாய் மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில், பா.ஜ., பிரமுகர் பிரித்வி உட்பட 10 பேரிடம் விளக்கம் கேட்டு தற்போது, நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் வழியாக, 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், விமான நிலைய புறப்பாடு பகுதியில், 'ஏர்ஹப்' என்ற பரிசு பொருட்கள் கடை நடத்தி வந்த, ஷபீர் அலி என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவருடன் கடையில் வேலை செய்த நபர்கள், இலங்கை பயணி என, ஒன்பது பேரை, கடந்தாண்டு ஜூன் மாத இறுதியில், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். கடை நடத்த உரிமம் பெற, ஷபீர் அலிக்கு உதவியதாக, பா.ஜ., பிரமுகர் பிரித்வி மற்றும் அவர் தொடர்புடைய வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம் மற்றும் சென்னையில் உள்ள சில இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
சிறையில் உள்ள ஷபீர் அலி மற்றும் இலங்கை பயணி இருவர் மீது, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷபீர் அலியின் கடையில் வேலை பார்த்தவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்தில், தற்போது 10 பேருக்கு, சுங்கத் துறை அதிகாரிகள், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும், கடத்தல் பின்னணியில் உள்ள, புதுக்கோட்டையை சேர்ந்த முக்கிய புள்ளியை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு நெருங்கியவர்கள், கடை நடத்த உரிமம் வழங்க உதவியவர்கள், அவர்களுக்கு பின்புலமாக இருப்பவர்கள் என, 10 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
பா.ஜ., பிரமுகர் பிரித்வி மற்றும் அவரது நிறுவனம் தொடர்புடையவர்கள் சிலரை அழைத்து விசாரணை நடத்தி உள்ளோம். சர்வதேச பின்னணி இருப்பதால், சிலர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடத்தல் தங்கத்தை விற்று, ஹவாலா பணப் பரிமாற்றம் செய்ததாக, ஷபீர் அலி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் விசாரிக்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் -

